ADDED : மே 04, 2024 01:09 AM

உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கப் போவது யார் என்பதில் பல வாரங்களாக நீடித்து வந்த, 'சஸ்பென்ஸ்' ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. ரேபரேலி தொகுதியில் ராகுலும், அமேதி தொகுதியில் சோனியா குடும்பத்தில் ஒருவராக மதிக்கப்படும் கிஷோரி லால் சர்மாவும் கடைசி நேரத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகின்றன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த இரு தொகுதிகளும் காங்கிரசின் கட்டுப்பாட்டில் தான் பெரும்பாலும் இருந்து வந்துள்ளன.
சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் இரண்டு லோக்சபா தேர்தல்களில், இந்திராவின் கணவர் பெரோஸ் காந்தி, ரேபரேலி தொகுதியில் வென்றார். அதன் பின் 1967, 71, 80ல் இந்திரா இங்கிருந்து தேர்வானார்.
பின், 1980ல் நடந்த இடைத்தேர்தல் மற்றும் 1984 பொதுத் தேர்தலில் காங்.,கின் அருண் நேரு இங்கு போட்டியிட்டு வென்றார். கடந்த 1989 மற்றும் 1991 தேர்தல்களில், இந்திராவின் உறவினர் ஷீலா கவுல் இங்கு வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதி, காங்., கைகளில் இருந்து மூன்று முறை மட்டுமே நழுவி சென்றுள்ளது. கடந்த 1977ல், 'எமர்ஜென்சி' காலத்துக்கு பின் நடந்த தேர்தலில், ஜனதா கட்சியின் ராஜ் நாராயண், அப்போதைய பிரதமரான இந்திராவை இங்கு தோற்கடித்தார்.
பின், 1996 மற்றும் 98 தேர்தல்களில் பா.ஜ.,வின் அசோக் சிங் இங்கு வெற்றி பெற்றார். 2004ல் நிலைமை மீண்டும் மாறியது. ரேபரேலி தொகுதி சோனியா வசம் வந்தது. 2004 முதல் 2019 வரை காங்., முன்னாள் தலைவர் சோனியா இங்கு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார்.
தற்போது அவர் ராஜ்யசபாவுக்கு இடம் மாறியதை தொடர்ந்து, ரேபலேியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
பிரியங்கா நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால், அவர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. ஆர்வமாக இருந்த அவரது கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு கட்சி தலைமை வாய்ப்பளிக்கவில்லை.
ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கித் தவிக்கும் அவர் போட்டியிட்டால், பா.ஜ.,வின் வெற்றி தேர்தலுக்கு முன்பே உறுதியாகிவிடும் என, கட்சி தலைமை கருதியதாக கூறப்படுகிறது.
அதே நேரம், 1967ல் உருவாக்கப்பட்டதில் இருந்து கடந்த 31 ஆண்டுகளாக காங்., பிடியில் இருந்த அமேதி தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2004 முதல் 2014 வரை மூன்று முறை இங்கு வென்ற ராகுல், 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இராணியிடம் 55,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். எனவே, அங்கு மீண்டும் களம் இறங்க இம்முறை அவர் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
கேரளாவின் வயநாட்டில் தேர்தலை சந்தித்த ராகுல், அமேதி பக்கம் பாராமுகமாகவே இருந்தார். அவரை சம்மதிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காங்.,கின் கவுரத்தை பிரதிபலிக்கும் இந்த இரு தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி தொடர்ந்தது.
மே 20 தேர்தல் நடக்கும் நிலையில், மனு தாக்கலுக்கு நேற்று தான் கடைசி நாள். நேற்று முன்தினம் வரை வேட்பாளர்கள் அறிவிக்காதது காங்கிரஸ் கட்சிக்கு கவுரவ பிரச்னையானது.
கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டனர். தாயாரின் தொகுதியான ரேபரேலியில் ராகுலும், அமேதியில், சோனியா குடும்பத்தில் ஒருவராக மதிக்கப்படும் கிஷோரி லால் சர்மா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 1967 முதல் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வரும் அமேதி தொகுதியில், ராஜிவின் நெருங்கிய நண்பர் சதீஷ் சர்மா கடந்த 1998ல் போட்டியிட்டு பா.ஜ.,விடம் தோற்றார். பின், 1999ல் சோனியா மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். அதன் பின், 2004ல் ரேபரேலிக்கு மாறினார்.
இரு தொகுதிகளுக்கான காங்., வேட்பாளர்கள் நேற்று காலை அறிவிக்கப்பட்டனர். வேட்பு மனு தாக்கல் முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அவர்கள் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தாயாரின் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ராகுலுடன், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, பிரியங்கா, ராபர்ட் வாத்ரா உள்ளிட்டோர் வந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின் மாவட்ட காங்., அலுவலகத்துக்கு அவர்கள் சென்றனர். அங்கு, சோனியாவின் குடும்ப புரோகிதர் ராதே ஷியாம் தீக் ஷித் செய்த பூஜையில் பங்கேற்றனர். ரேபரேலியில் ராகுலை எதிர்த்து பா.ஜ.,வின் தினேஷ் பிரதாப் சிங், பகுஜன் சமாஜின் தாக்குர் பிரசாத் யாதவ் போட்டியிடுகின்றனர்.
உணர்ச்சிகரமான தருணம்
என் பாட்டி, தாத்தா ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி ரேபரேலி. இங்கு நான் போட்டியிடுவது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம். கர்மபூமியில் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் மிகப் பெரிய பொறுப்பை எனக்கு, என் தாய் வழங்கியுள்ளார். என்னை பொறுத்தவரை ரேபரேலி, அமேதி ஆகிய இரண்டுமே இரு கண்கள் போன்றவை. அமேதியில் போட்டியிடும் கிேஷார் லால் சர்மா, எங்கள் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர்.
ராகுல்
எம்.பி., காங்கிரஸ்
தோல்வி உறுதி
தங்கள் பாரம்பரிய தொகுதி என அமேதியை இதுவரை கூறி வந்த ராகுல் குடும்பத்தினர், தற்போது இந்த தொகுதியை புறக்கணித்துள்ளனர். அமேதியில் போட்டியிடுவதை ராகுல் குடும்பத்தினர் தவிர்த்துள்ளதன் வாயிலாக, தேர்தல் நடப்பதற்கு முன்பே, இங்கு காங்கிரஸ் தோற்று விடும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஸ்மிருதி இரானி
அமேதி வேட்பாளர், பா.ஜ.,
அநீதி இழைக்கிறார்
வயநாடில் போட்டியிடும் ராகுல், கடைசி நேரத்தில் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இரண்டிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் வாயிலாக இரண்டு தொகுதி மக்களுக்கும் அவர் அநீதி இழைக்கிறார். அவர், வயநாடு தொகுதியை கைவிட அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அந்த தொகுதி மக்களுக்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஆனி ராஜா
வயநாடு வேட்பாளர், இந்திய கம்யூ.,
- நமது சிறப்பு நிருபர் -