ADDED : ஜூன் 27, 2024 10:58 PM

பெங்களூரு: தர்ஷனின் வழக்கு மக்களுக்கு பத்து பாடங்களை கற்று கொடுத்துள்ளது.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன், 47. இவரது நெருங்கிய தோழி பவித்ரா கவுடா, 34. இவருக்கு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33, ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியதால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கு மக்களுக்கு பத்து பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.
1. திருமண வாழ்க்கையில் நுழைந்த பின்னர் ஆணோ, பெண்ணோ திருமண வாழ்க்கையை தாண்டி செல்லக்கூடாது. வரம்பு மீறினால் நம்மை சார்ந்து இருப்பவர்களும், பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும்
2. நடிகராக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, மூன்றாம் நபரின் தனிப்பட்ட பிரச்சனையில் தலையிடக் கூடாது
3. பிரபலங்களின் வாழ்க்கை வெளிப்பார்வையில் மிக அழகாக தெரிகிறது. அதுபோல சில வாழ்க்கையும் வெளியில் பார்க்க அழகாக இருக்கலாம். அதற்காக அவர்கள் வழி தவறி சென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது
4. வீட்டை தவிர்த்து, விரும்பத்தகாத உறவு வைத்தால் நல்லதல்ல. இது சமூகத்தின் முன் தலை குனிய வைக்கும்
5. பணம் வந்தாலும் ஆணவம், அகங்காரத்துடன் செயல்படக்கூடாது. மற்றவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால், பொது இடத்தில் தலை நிமிர்ந்து நிற்கலாம்
6. யாருடன் நட்பு வைத்துக் கொள்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல உறவுகளை எப்போதும் பேணி பாதுகாக்க வேண்டும்
7. குடிபோதையில் எந்த தவறான முடிவும் எடுக்க கூடாது. அப்படி செய்தால் வாழ்க்கையில் குழப்பத்திற்கு வழிவகுக்கும்
8. புகழுக்கு மத்தியில் நம்மை நாமே மறந்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நாமே பொறுப்பாவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
9. யார் மீதும் பொறாமை கொள்ள கூடாது. யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை தான். சட்டத்திற்கு உட்பட்டு நாம் அனைவரும் வாழ்கிறோம்
10. நமக்கு மிகவும் நெருக்கம் இல்லாதவர்களுடன், பயணம் செய்யும்போது முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இது ஒரு சோதனை காலம்
தர்ஷன் மனைவி விஜயலட்சுமி இன்ஸ்டாகிராம் பதிவு:
என் அன்பு சகோதரர்களே, தர்ஷன் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். நீங்கள் அவரை நேசிக்கும் அளவுக்கு, உங்களை அவர் இதயத்தில் சுமந்து உள்ளார்.
இது ஒரு சோதனை காலம். எனக்காக, உங்களுக்காக நாம் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். அமைதியாக இருங்கள். பொறுமையாக பேசுங்கள். உங்களின் கவலை பற்றி தர்ஷனிடம் தெரிவித்தேன்.
நாம் நீதிமன்றங்களை நம்புவோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இது போன்ற கடினமான காலத்தில், தர்ஷனுக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களை அன்னை சாமுண்டீஸ்வரி பார்த்துக் கொள்வார். மீண்டும் நல்ல காலம் வரும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தர்ஷனுக்கு எதிராக
30 ஆதாரங்கள்
ரேணுகாசாமியை கொலை செய்துவிட்டு தர்ஷன் மைசூரு சென்று விட்டார். வழக்கிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகள் பலரையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தர்ஷன் கைது செய்யப்பட்ட பின்னரும், அவரை காப்பாற்ற ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிலர் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை முதல்வர் சித்தராமையா கண்டித்தார்.
தர்ஷன் வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள போலீசார், சாட்சியங்களை மும்முரமாக சேகரித்தனர். இந்நிலையில் தர்ஷனுக்கு எதிராக மட்டும் போலீசார் 30 சாட்சியங்களை சேகரித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

