ADDED : மே 29, 2024 09:22 PM
பெங்களூரு: மொபைல் போன் அழைப்பு தரவுகளை விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்
பெங்களூரில், மொபைல் போன் அழைப்பு தரவுகளை ஒரு கும்பல் விற்பனை செய்வதாக, சி.சி.பி.,யின் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் உள்ள, ராஜஸ்தானி கார்ப்பரேட் சர்வீஸ், பசவேஸ்வரா நகரில் உள்ள எலிகண்ட் டிடெக்டிவ், பிரசாந்த் நகரில் உள்ள மஹாநகரி டிடெக்டிவ் ஆகிய புலனாய்வு நிறுவனங்களில் நேற்று முன்தினம் சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, மொபைல் போன் அழைப்பு தரவுகளை மூன்று புலனாய்வு நிறுவனங்களும் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெங்களூரு கெங்கேரியின் புருஷோத்தம், 43, மாரத்தஹள்ளியின் திப்பேசாமி, 48, அஞ்சனா நகரின் மகாந்தகவுடா பாட்டீல், 46, விஜயநகரின் ரேவந்த், 25.
தாசனபுராவின் குருபாதசாமி, 38, விஜினபுராவின் ராஜசேகர், 32, கொத்தனுார் தின்னேயின் சதீஷ்குமார், 39, ஜே.சி., நகரின் பாரத், 28, சீனிவாஸ், 46, மஹாராஷ்டிரா புனேயின் பிரசன்ன தத்தாத்ரேயா, 36 ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறுகையில், ''போலீசார் வழக்குகளின் உண்மை நிலவரத்தை கண்டறிய, மொபைல் போன் அழைப்பு தரவுகளை சரிபார்ப்பர். அதுவும் உயர் அதிகாரிகள் அனுமதியுடன் தான்.
''கைதான 10 பேரும் யாருக்காக, மொபைல் அழைப்பு தரவுகளை கண்காணித்துள்ளனர். யாருக்கு விற்றனர் என்று தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்துகிறோம்,'' என்றார்.