ADDED : செப் 07, 2024 07:29 AM

ஹொளே நரசிபுராவில், 10 ரூபாய்க்கு புலாவ் வழங்கும் உணவகங்கள் உள்ளன. ஏழை மக்களை பொறுத்தவரை, இந்திரா உணவகங்களாக விளங்குகின்றன.
இன்றைய காலத்தில், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுமுகமாக உள்ளது. பால், காய்கறிகள், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், உணவு தானியங்கள் என, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். விலை உயர்வை காரணம் காண்பித்து, ஹோட்டல்கள், உணவகங்களில் உணவு, சிற்றுண்டி விலையை உயர்த்துகின்றனர்.
வயிறு நிரம்பும்
நான்கு இட்லி விலை 40 முதல் 50 ரூபாய்; இரண்டு தோசைகளின் விலை 50 ரூபாய்; பிசிபேளாபாத் 60 ரூபாய் என எந்த உணவு, சிற்றுண்டிகளின் விலையும், ஏழைகள், நடுத்தர வர்க்கத்து மக்களின் கைக்கு எட்டும்படி இல்லை. ஆனால் வெறும் 10 ரூபாய்க்கு, வயிறு நிரம்ப புலாவ் வழங்கும் உணவகங்கள் ஹாசனில் உள்ளன.
ஹாசன், ஹொளேநரசிபுராவின் கணபதி கோவில் அருகில் தள்ளு வண்டிகளில் வியாபாரிகள், உணவகம் நடத்துகின்றனர். இவர்கள் தினமும் பலரின் வயிற்றை நிரப்புகின்றனர். இந்த உணவகங்களில் புலாவ் விலை வெறும் 10 ரூபாய் மட்டுமே. வயிறு நிரம்ப எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதே 10 ரூபாய் கொடுத்தால் போதும்.
அருமையான சுவை
கடந்த 20 ஆண்டுகளாக, சுசிலம்மா, சாந்தா, நாகம்மா, சந்திரண்ணா, கிருஷ்ணா உட்பட பலர் தள்ளு வண்டி உணவகம் நடத்துகின்றனர். மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல், வியாபாரம் செய்கின்றனர். விலை குறைவு என்பதால், தரம், சுவையில் சமரசம் செய்து கொள்வது இல்லை.
அருமையான சுவையில், சுகாதாரமான உணவு வழங்குவதால், அதிகமான வாடிக்கையாளர்கள் தள்ளு வண்டி உணவகங்களை தேடி வருகின்றனர். இதனால் வியாபாரம் அள்ளுகிறது. வியாபாரிகளின் வாழ்க்கையும் நல்ல முறையில் நடக்கிறது.தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஊழியர்கள் என பலர், தள்ளு வண்டி உணவகங்களில் 10 ரூபாய்க்கு, வயிறாற புலாவ் சாப்பிட்டு பணிக்கு செல்கின்றனர். ஹொளே நரசிபுராவில் ஏராளமான பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கும் கூட, தள்ளு வண்டி உணவகங்களின் புலாவ் பிடித்தமானது.
காலையில் கம்ப்யூட்டர் பயிற்சி, டியூஷன் சென்டர்களுக்கு செல்லும் மாணவர்களும் காலை சிற்றுண்டிக்காக, இங்கு வந்து புலாவ் சாப்பிடுவதை காண முடிகிறது. இதற்கு முன் 5 ரூபாய்க்கு புலாவ் விற்றனர். காய்கறிகள் விலை அதிகரித்ததால், இதன் விலை 10 ரூபாயாக அதிகரித்தனர். ஆனால் இன்றைக்கும், '5 ரூபாய் புலாவ்' என்றே இந்த கடைகள் பிரபலமடைந்துள்ளன.
- நமது நிருபர் -