விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி வகுப்பு: இரண்டு ஆண்டுகளில் ரூ.135 கோடி காலி
விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி வகுப்பு: இரண்டு ஆண்டுகளில் ரூ.135 கோடி காலி
ADDED : நவ 27, 2025 03:35 AM

சென்னை: விவசாயிகளுக்கு சாகுபடி பயிற்சி வழங்குவதாக கூறி, இரண்டு ஆண்டுகளில் 135 கோடி ரூபாயை, வேளாண் துறை காலி செய்துள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் 14.7 கோடி ஏக்கரில், 79.3 லட்சம் விவசாயிகள் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 62 சதவீதம் பேர், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள்.
சாகுபடி தொடர்பாக, விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு, வனம், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகள் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இதற்காக, 'அட்மா' என்ற பெயரில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது.
மூன்று பேர் வேளாண்மை பட்டம், தோட்டக்கலை டிப்ளமா படித்த மூன்று பேர் வீதம், வட்டாரத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு சாகுபடி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2024 - 25ம் ஆண்டு, இத்திட்டத்திற்கு 43.6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 4.79 லட்சம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 91.6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, ஐந்து லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளில், விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு மட்டும், 135 கோடி ரூபாயை வேளாண் துறை செலவழித்து வருகிறது.
ஆனால், இந்த பயிற்சி வாயிலாக சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை; சாகுபடி முறையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், வனம், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் சேர்த்து, அட்மா திட்ட நிதியில் பயிற்சி வழங்க வேண்டும்.
ஆனால், வேளாண் துறையே முழு நிதியையும் செலவிட்டு வருகிறது. ஒதுக்கும் நிதியில், 25 சதவீதம் ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் பங்கேற்றால், சாகுபடி மானியம் வழங்குவதாக வேளாண் துறையினர் கூறுவதால், சிறு விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.
ஒரே பயிற்சியில் மூன்று வகை போட்டோக்களை எடுத்து, அதை மூன்று முறை பயிற்சி அளித்ததாக கணக்கு காட்டப்படுகிறது.
அட்மா திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், உழவர் நல சேவை மையம் மற்றும் உழவரை தேடி வேளாண்மை என்ற இரண்டு திட்டங்களை வேளாண் துறை துவங்கியுள்ளது.
இந்த திட்டங்கள் வாயிலாகவும் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கென தனியாக நிதி செலவிடப்பட்டு வருகிறது.
இன்ப சுற்றுலா அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாக கூறி, அதிகாரிகளும் இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர். கடந்த நிதியாண்டை விட நடப் பாண்டு நிதியாண்டில், 21,000 விவசாயிகளுக்கு கூடுதலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதற்காக, கடந்தாண்டை விட கூடுதலாக 48 கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நிதித்துறை எப்படி கண்டுகொள்ளாமல் உள்ளது என்பது தெரியவில்லை.
இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

