போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா '10 ஆண்டு'
போலீஸ்காரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா '10 ஆண்டு'
ADDED : செப் 10, 2024 11:08 PM
மங்களூரு: போலீஸ் ஏட்டை கொல்ல முயன்ற இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
மங்களூரு உல்லால் பகுதியில் 2015 டிசம்பர் 17ம் தேதி இரவு, சாலையில் மது பாட்டில்களை வீசி, நான்கு பேர் ரகளையில் ஈடுபட்டனர். உல்லால் போலீஸ் நிலைய ஏட்டு உமேஷ், போலீஸ்காரர் ரவீந்திரன் அங்கு சென்றனர்.
நான்கு பேரையும் கண்டித்து அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் கோபம் அடைந்த நான்கு பேரும், ஏட்டு ரவீந்திரனிடம் தகராறு செய்தனர்.
அவரது கைகளை, மூன்று பேர் இறுக்கி பிடித்து கொள்ள, ஒருவர் கத்தியால் குத்தினார். பின், நான்கு பேரும் தப்பியோடினர். உயிருக்கு போராடிய ரவீந்திரனை, ஏட்டு உமேஷ் மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினார்.
ரவீந்திரன் அளித்த கொலை முயற்சி புகாரில், உல்லாலின் முஸ்தாக், 32, ஜாகிர், 36, யாசின், 42, அஷ்ரப், 50 மீது வழக்கு பதிவானது.
முஸ்தாக், ஜாகிர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தற்போது வரை கைதாகவில்லை.
கைதான இருவர் மீதும், மங்களூரு ஆறாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று நீதிபதி காந்தராஜ் தீர்ப்பு கூறினார்.
இருவருக்கும், தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 16,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

