ADDED : மார் 06, 2025 10:51 PM
விக்ரம்நகர்:தலைநகரில் போக்குவரத்து அமைப்பை மாற்றியமைக்க 100 நாள் செயல்திட்டத்தை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் வெளியிட்டார்.
தலைநகரில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநில அமைச்சர் பங்கஜ் குமார் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில போக்குவரத்துக் கழகம், டில்லி மெட்ரோ ரயில் கழகம் மற்றும் பிற போக்குவரத்து நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது போக்குவரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய 100 நாள் செயல்திட்டத்தை அமைச்சர் வெளியிட்டார். விதிமீறல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
திக்ரி எல்லை, முண்ட்கா, நரேலா ஆகிய இடங்களில் பேருந்து முனையங்கள் அமைக்கும் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டது. அத்துடன் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தவும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
திருத்தப்பட்ட மின்சார வாகன கொள்கை அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தேவையான பரிந்துரைகளை தெரிவிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.