அவசரத்துக்கு வராத 108 ஆம்புலன்ஸ்கள் ஆண்டுக்கு 1,000 பேர் உயிரிழக்கும் சோகம்
அவசரத்துக்கு வராத 108 ஆம்புலன்ஸ்கள் ஆண்டுக்கு 1,000 பேர் உயிரிழக்கும் சோகம்
ADDED : டிச 09, 2024 06:46 AM
பெங்களூரு: சுகாதாரத் துறையில் கர்நாடகா முன்னணியில் இருந்தாலும், கிராமப்புற மக்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை. '108' அவசரகால ஆம்புலன்ஸ்களை அழைத்தாலும் பதில் கிடைப்பதில்லை. இதனால் ஆண்டுக்கு 1,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.
ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க '108' ஆம்புலன்ஸ்கள் இலவசமாக இயக்கப்படுகின்றன. ஆனால், இதை பெறுவதற்கு பல தடங்கல்கள் உள்ளன.
மூன்று மாதங்களுக்கு முன்பு, துமகூரு மாவட்டம் பாவகடாவில், ஒரு முதியவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சரியான நேரத்தில் துமகூரு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்கு, 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை. தாமதமாக அவரை அழைத்து சென்றதால் அவர் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
பைக்கில் உடல்
அவரது உடலை எடுத்து வரவும் ஆம்புலன்ஸ் கிடக்கவில்லை. விரக்தியடைந்த அவரது பிள்ளைகள், தங்கள் தந்தை உடலை பைக்கில் வைத்து ஊருக்கு எடுத்து வந்தனர்.
துமகூரிலேயே இந்த நிலைமை என்றால், பீதர் போன்ற மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் நிலை என்ன. அவசர சிகிச்சைக்காக தொலைதுார கிராம மக்கள் படாத பாடுபடுகின்றனர்.
சரியான நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் கிடைக்காததால் ஆண்டு தோறும் சராசரியாக 1,000 பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
ஆம்புலன்ஸ் சேவைக்காக தினமும் 8--,000 முதல் 10,000 அழைப்புகள் வருகின்றன. இதில் கோல்டன் டைம் என்ற அவசர நிலை நோயாளிகளில் 2-,000 - 3,000 பேரில், 100 - -200 பேருக்கு தான் சேவை கிடைக்கிறது. 50 சதவீத அழைப்புக்கு பதிலே கிடைப்பதில்லை.
கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் 108 ஆம்புலன்சுக்கு 1.50 லட்சம் அழைப்புகள் வருகின்றன. இதில் 42 சதவீத மக்களுக்கே பயன் கிடைக்கிறது என்று சி.ஏ.ஜி., அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு தீர்வுதான் என்ன?
l மாநிலத்தின் எந்த மூலையிலும் இருந்தும் ஆம்புலன்ஸ் அழைப்பு வந்தால், உடனடியாக கிடைப்பதில் சிறப்பு கவனம்
l மலைக்கிராமங்கள், நகரத்திலிருந்து தொலைவில் இருக்கும் குக்கிராமங்களுக்காக தனியாக ஆம்புலன்ஸ்கள்
l காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை முழுமையாக நிரப்புதல்
l மருந்து டெண்டர்களை சரியான நேரத்தில் மேற்கொள்ளல்
l ஆரம்ப சுகாதார நிலைய கிடங்கில் இருந்து நேரடியாக மருந்துகள் வாங்கும் வசதியை அமல்படுத்துதல்.
பணிச்சுமை அதிகமுள்ள இடங்களில் தான், 108 ஆம்புலன்ஸ்கள் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சுகாதாரம் மற்றும் குடும்பநலத் திட்ட ஆம்புலன்ஸ்களை மாவட்ட, தாலுகா மருத்துவமனைகள் பயன்படுத்துகின்றன. 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானால், இந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் சேவைகளை தொடர வேண்டும்.
- -சிவகுமார், ஆணையர்,
மாநில சுகாதாரம், குடும்பநலத் துறை