சரிந்து விழுந்த விளம்பர பலகைக்கு அனுமதி பெறவில்லை அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன 14 உயிர்கள்
சரிந்து விழுந்த விளம்பர பலகைக்கு அனுமதி பெறவில்லை அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன 14 உயிர்கள்
ADDED : மே 15, 2024 12:54 AM

மும்பை, மும்பையில், பிரமாண்ட விளம்பர பலகை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விளம்பர பலகை வைப்பதற்கு, மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துஉள்ளது. இந்த விபத்து மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூறாவளி காற்று
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநில தலைநகரான மும்பையில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்று வீசியது. இதில் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியின் சேதா நகர் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கை ஒட்டி அமைந்துள்ள 120 அடி உயரம், 120 அடி அகலம் உடைய பிரமாண்ட விளம்பரப் பலகை, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு வீசிய சூறாவளி காற்றில் திடீரென சரிந்து பெட்ரோல் பங்க் மீது விழுந்தது.
விளம்பரப் பலகையின் இரும்பு கம்பிகள், சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்தன. இந்த இடிபாடுகளுக்குள், 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
மும்பை மாநகராட்சி, மும்பை பெருநகரப் மேம்பாட்டு ஆணைய பணியாளர்கள் 125 பேர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 100 பேர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இரும்புக் கம்பிகளை இயந்திரம் வைத்து அறுக்க இரண்டு குழுக்கள் வரவழைக்கப்பட்டன. 12 தீயணைப்பு வாகனங்கள், 25 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப் பட்டன.
மீட்புப்பணிகள் 21 மணி நேரத்தையும் கடந்து தொடர்ந்து நடந்தது. நேற்று காலை நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 89 பேர் மீட்கப்பட்டனர்.
இதில், 14 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 75 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதில், 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பங்கை ரயில்வே போலீஸ் நல்வாழ்வு கழகம் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
இந்த இடத்தை போலீஸ் நல்வாழ்வு கழகத்துக்கு மஹாராஷ்டிரா அரசின் போலீஸ் வீட்டு வசதித்துறை குத்தகைக்கு அளித்துள்ளது. அந்த இடத்தில், 'ஈகோ மீடியா' என்ற நிறுவனம் விளம்பர பலகைகளை அமைத்துள்ளது. இந்த பலகைகளை வைக்க, ரயில்வே போலீசின் உதவி கமிஷனரிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது.
மும்பை மாநகராட்சியிடம் இருந்து அனுமதியோ அல்லது தடையில்லா சான்றோ பெறப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துஉள்ளது.
இதை தொடர்ந்து, விளம்பர பலகை வைக்க ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள அனைத்து அனுமதி களையும் உடனடியாக ரத்து செய்யும்படி, ரயில்வே போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் ரயில்வே கமிஷனருக்கு, மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மீட்பு பணி தாமதம்
'ஈகோ மீடியா' விளம்பர நிறுவன உரிமையாளர் பாவேஹ் பிந்தே மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் மாலை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
மும்பையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அனைத்தும் உடனடியாக தணிக்கைக்கு உட்படுத்தப்படும். சட்டவிரோதமாகவும், ஆபத்து விளைவிக்ககூடிய வகையில் உள்ள பலகைகள் உடனடியாக அகற்றப்படும்.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீட்புக் குழுவினர் கூறுகையில், 'விபத்து நடந்த இடம் பெட்ரோல் பங்க் என்பதால், காஸ் கட்டர் போன்ற உபகரணங்களை மீட்பு பணிக்கு பயன்படுத்த முடியவில்லை.
இறுதியில் கிரேன்கள் உதவியுடன் விளம்பர பலகையை சற்று அகற்றி, மீட்புக்குழுவினர் அதற்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. இதனால் தான் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது' என்றனர்.

