பலாத்காரம் செய்து பெண் கொலை 14 பேருக்கு ஆயுள் தண்டனை
பலாத்காரம் செய்து பெண் கொலை 14 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஆக 03, 2024 12:43 AM
பெர்ஹாம்பூர், ஒடிசாவில் 15 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
ஒடிசாவில் கஜபதி மாவட்டத்தின் பாராலாகேமுண்டி பகுதியில் வசித்த ஒரு பெண்ணை, 2009ம் ஆண்டு மார்ச்சில், வீடு புகுந்து ஒரு கும்பல் தாக்கியதுடன், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடியது.
இதில், அந்த பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த செயலில் 16 பேர் ஈடுபட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நிகழ்ந்த ஓராண்டிற்குள் கைதானவர்களுக்கு ஜாமின் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் சாமல் நேற்று வழங்கினார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'அனைத்து தரப்பு சாட்சியங்களையும் விசாரித்ததில், 16 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன; அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வழக்கில் கைதான 16 பேரில் இருவர் உயிரிழந்ததால், மற்ற 14 பேருக்கும் இந்த தண்டனை பொருந்தும்' என குறிப்பிட்டார்.