ADDED : பிப் 26, 2025 12:19 AM
கலபுரகி,; கலபுரகி லட்லே மஷாக் தர்காவில் உள்ள, சிவலிங்கத்தை வழிபட ஹிந்து அமைப்பின் 15 பேருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கலபுரகி கிளை அனுமதி அளித்து உள்ளது.
கலபுரகி, ஆலந்தில் லட்லே மஷாக் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ராகவ் சைதன்யா கல்லறையில் சிவலிங்கமும் உள்ளது. இந்த சிவலிங்கத்தை ஹிந்து, முஸ்லிம் பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சிவலிங்கத்தை சிலர் அவமதிப்பு செய்தனர். அப்போது ஆலந்த் எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ஜ.,வின் சுபாஷ் குத்தேதார், சிவலிங்கத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனால் அவருக்கு எதிராக ஒரு சமூகத்தினர் அவதுாறு வீடியோக்கள் பதிவிட்டனர். இது, ஹிந்து அமைப்பினர் இடையில் கொந்தளிப்பு ஏற்படுத்தியது.
கடந்த 2022ல் சிவராத்திரி அன்று, தர்காவில் உள்ள சிவலிங்கத்தை வழிபட சென்ற ஹிந்து அமைப்பினர் மீது கல் வீசப்பட்டது. இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து தர்காவில் வழிபடவும், சிவலிங்கத்தை வழிபடவும் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று மஹா சிவராத்திரியை ஒட்டி, சிவலிங்கத்தை வழிபட ஸ்ரீராமசேனை தேசிய கவுரவ தலைவர் அந்தோலா சித்தலிங்க சுவாமி உட்பட 100 பேர் தர்காவுக்கு செல்ல அனுமதி கேட்டு, கலபுரகி மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்தது. ஆனால் 100 பேரை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் மறுத்தது.
இதனால், உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளையில் அவர்கள் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. அந்தோலா சித்தலிங்க சுவாமியை தவிர 15 பேர், தர்காவுக்கு சென்று சிவலிங்கத்தை வழிபடலாம்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வழிபாடு நடத்தலாம். 15 பேரின் பெயர் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.