நடிகர் தர்ஷன் உட்பட 17 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
நடிகர் தர்ஷன் உட்பட 17 பேருக்கு மேலும் 14 நாட்கள் காவல் நீட்டிப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:17 AM

பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவர், நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். இதனால் கடந்த மாதம் 8 ம் தேதி ரேணுகாசாமியை, தர்ஷன், பவித்ரா, தர்ஷனின் ஆதரவாளர்கள் சேர்ந்து கொலை செய்தனர்.
தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை முடிந்த பின் கடந்த 21ம் தேதி, பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி விஸ்வநாத் கவுடர் உத்தரவிட்டார். இதையடுத்து 17 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேர், துமகூரு சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், 17 பேரின் நீதிமன்ற காவலும் நேற்றுடன் முடிவடைந்தது. 17 பேரையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீதிபதி விஸ்வநாத் கவுடர் முன் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர்.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார், தர்ஷன் உட்பட 17 பேரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்தும், அவர்களுக்கு மீண்டும் நீதிமன்ற காவல் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
தர்ஷன் தரப்பு வக்கீலும் தங்களது வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தர்ஷன் உட்பட 17 பேரையும், மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மனம் வலிக்கிறது
வாய் திறந்த சுமலதா
மாண்டியா முன்னாள் எம்.பி., சுமலதா, தர்ஷனை தனது மகன் போன்றவர் என்று அடிக்கடி கூறுவார். ஆனால் தர்ஷன் கொலை வழக்கில் கைதான பின், தர்ஷனுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை.
இந்நிலையில், மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்ஷன் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த சூழ்நிலையில், நான் எதுவும் பேசினால் சரியாக இருக்காது. சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
தர்ஷனின் தாய், தம்பி, மனைவியின் மனநிலை எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். தர்ஷனின் மனைவி விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருப்பேன். தனிப்பட்ட உறவுகள் வேறு.
கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் தாய், மனைவி கண்ணீர் வடித்ததை பார்த்து மனம் உடைந்தேன். நான் பார்த்த தர்ஷன் அனைவருக்கும் உதவி செய்யும் நல்ல மனிதர். அவரை எனது மகனாக தான் பார்த்தேன். எந்த தாய்க்கும் தனது மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டால், மனம் வலிக்கத்தான் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.