ADDED : ஏப் 18, 2024 04:23 AM
தேர்தல் வந்து விட்டால் போதும். அப்போது தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு, மக்களை பற்றிய நினைப்பு வரும். ஒவ்வொரு தேர்தலின் போதும், மக்களிடம் ஓட்டு கேட்க செல்லும் போது, 'உங்க ஊர்ல இருக்குற பிரச்னையை தீர்த்து வைக்குறேன். பிரச்னையை தீர்க்க என்னால மட்டும் தான் முடியும். எனக்கு ஓட்டு போடுங்க'ன்னு, வீர வசனம் பேசுவாங்க. அதுக்கு அப்புறம் ஐந்து வருஷம் எங்க போவாங்கன்னு தெரியவே தெரியாது. நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
வெற்றி பெற்ற பின்னர், பிரச்னை பற்றி கண்டுகொள்வது இல்லை. ஓட்டு போட்ட மக்கள் கேட்டால், 'நகருக்குள் பிரச்னை வர தான் செய்யும்' என்று, மழுப்பலாக கூறிவிட்டு செல்கின்றனர்.
பெங்களூரு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான பெங்களூரு ரூரல், ராம்நகர், துமகூரிலும், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்கள் பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால், சட்டசபை, லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக, மக்கள் கூறுவர். அவர்களிடம் சென்று அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தி, ஓட்டு போட வைத்து விடுவர். இதனால், அரசியல் பிரமுகர்கள் எந்த கவலையும் இன்றி உள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு ரூரல் தொட்டபல்லாப்பூர் மசார ஒசஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான தொழிற்பேட்டைகள் உள்ளன.
இந்த தொழிற்பேட்டையில் இருந்து வெளியாகும் கழிவுநீர், ஏரிகளில் கலக்கிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசடைகிறது. அந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. ஏரி தண்ணீரை பயன்படுத்தும், மக்களின் உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது.
கழிவுநீர், ஏரியில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, பஷெட்டிஹள்ளி உட்பட 17 கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிக்க, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை அமைத்தும் அது செயல்படாமல் உள்ளது. இதனால் கோபம் அடைந்துள்ள 17 கிராம மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்.
இதுபற்றி அறிந்த தொட்டபல்லாப்பூர் தாசில்தார் அலுவலக ஊழியர்கள், 17 கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினர். ஆனால் மக்கள் ஏற்கவில்லை.
'ஒவ்வொரு தேர்தலிலும் இதை தான் சொல்கின்றனர். எதுவும் நடக்கவில்லை' என்று ஆக்ரோஷம் வெளிப்படுத்தினர்.
இதனால் 17 கிராம மக்களிடமும், பெங்களூரு ரூரல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பேச்சு நடத்த உள்ளனர். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

