ADDED : மே 28, 2024 06:19 AM

'ரேமல்' புயலால் கர்நாடகாவை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட கன்னடர்கள், அந்தமான் - நிக்கோபர் விமான நிலையத்தில் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவான 'ரேமல்' புயல், மேற்கு வங்கம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, மேற்குவங்க அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்கள், விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது.
கோடை விடுமுறையை கொண்டாட, கர்நாடகாவின் மைசூரு, தாவணகெரே உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர், அந்தமான் நிக்கோபர் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
புயல் அறிவிப்பு கிடைத்தவுடன், நேற்று காலை விமான நிலையத்துக்கு கன்னடர்கள் வந்தனர். புயல் கரையை கடப்பதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உணவு, தண்ணீர் இன்றி விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
.- நமது நிருபர் -