ADDED : ஆக 19, 2024 10:45 PM

ஹூப்பள்ளி:
ஹூப்பள்ளியில் நள்ளிரவில் இரண்டு ரவுடி கும்பல்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கிச் சுடு நடத்தினர்.
ஹூப்பள்ளி - தார்வாட் மாவட்டத்தின், பழைய ஹூப்பள்ளி சதரஷோபா கடகர ஓணி என்ற பகுதியில், ரவுடி அப்தாப் கரடிகுட்டா, நேற்று முன்தினம் இரவு தன் கூட்டாளிகளுடன் நின்றிருந்தார்.
இதையறிந்த மற்றொரு ரவுடி ஆரீப் ஜாவூர், தன் கூட்டாளிகளுடன் அந்த இடத்துக்கு வந்து, திடீரென கத்தி உட்பட ஆயுதங்களால், அவர்களை சரமாரியாக தாக்கினர்.
இரு ரவுடி கும்பலுக்கும் மோதல் நடப்பது குறித்து, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வருவதை அறிந்த ரவுடி கும்பல்கள், அப்பகுதியில் இருந்து, ரத்த காயங்களுடன் ஓட்டம் பிடித்தனர்.
ஹூப்பள்ளி நகரம் முழுதும், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இரவு முழுதும் வலை வீசித் தேடினர்.
நகரின் புடரசங்கா சாலையில், ஒரு ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார், அவர்களை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், அக்கும்பல் போலீசாரை தாக்க முற்பட்டனர். பாதுகாப்பு கருதி, எஸ்.ஐ., விஸ்வநாத், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
அதையும் பொருட்படுத்தாமல், அக்கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டது. ரவுடி அப்தாப் கரடிகுட்டா, 39, காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அவரையும் அவரது ஐந்து கூட்டாளிகளையும் சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
காயமடைந்த ரவுடிக்கு, மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றொரு ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக இரண்டு ரவுடி கும்பல் மோதிக் கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் ஹூப்பள்ளியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழைய ஹூப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

