ADDED : ஏப் 02, 2024 10:12 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று மதியம், ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி இரு சகோதரிகள் உயிரிழந்தனர். அதேபோல, மேற்கு டில்லியில் ஒரு வீட்டில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், தாயும் மகளும் பலத்த காயம் அடைந்தனர்.
வடக்கு டில்லி சதர் பஜார் சமேலியன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் 2”00 மணிக்கு தீப்பிடித்தது.
தகவல் கிடைத்து நான்கு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். கட்டடம் முழுதும் புகை சூழ்ந்து இருந்ததால், முகமூடி அணிந்து கடும் போராட்டதுக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
வீட்டின் முதல் தளத்தில் இருந்த குளியல் அறையில் குலாஷ்னா,14, அனயா,12 ஆகிய இரு சகோதரிகளும் மயங்கிக் கிடந்தனர்.
இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதற்கிடையில், இரண்டு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தாய் - மகள் காயம்
மேற்கு டில்லி ராஜவுரி கார்டனில் ஒரு வீட்டில் நேற்று காலை 11:30 மணிக்கு, காஸ் சிலிண்டரில் நேற்று கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. தகவல் அறிந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.
வீட்டுக்குள் சிக்கியிருந்த ஓம்வதி,35, அவரது மகள் ஹேமலதா ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஓம்வதிக்கு 75 சதவீதமும் ஹேமலதாவுக்கு 20 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. இருவருக்கும் சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

