ADDED : ஏப் 27, 2024 11:40 PM
இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் உள்ள நரன்செய்னா பகுதியில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகாமிட்டுஇருந்தனர்.
நேற்று அதிகாலை திடீரென அருகேயுள்ள மலை உச்சியில் இருந்து, பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
அதிகாலை 12:30 முதல் 2:05 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது. இதில், இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்கள் அசாம் மாநிலம் கோக்ராஜ்ஹார் மாவட்டத்தை சேர்ந்த சர்கார் என்பதும், மற்றொருவர் மே.வங்கத்தின் பங்குரா மாவட்டத்தை சேர்ந்த அருப் சைனி என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் இரண்டு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் இம்பால் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

