ADDED : மார் 29, 2024 09:53 PM
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில், 22 வயது காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 42 வயது நபர், தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய நொய்டா போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ஹிர்தேஷ் கத்தேரியா கூறியதாவது:
கடந்த 27ம் தேதி இரவு 10 மணிக்கு, சிஜர்சி கிராமத்தில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து, 63வது செக்டார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்றனர். அங்கு, ஒரு இளம்பெண் மற்றும் ஒரு ஆண் மயங்கிக் கிடந்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்தப் பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
கழுத்தில் ரத்தக் காயங்களுடன் இருந்த அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டில்லியில் தங்கியிருந்த உ.பி.,யின் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த நிஷா, 22 மற்றும் நொய்டாவின் சிஜர்சி கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செய் குமார்,42 ஆகிய இருவரும் ஓராண்டாக காதலித்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி இரவு தனஞ்செய் வீட்டுக்கு நிஷா வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் நிஷா கழுத்தை நெரித்துக் கொலை செய்த தனஞ்செய், பிளேடால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து, தனஞ்செய் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

