14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் இறுதி களத்தில் 247 வேட்பாளர்கள்
14 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் இறுதி களத்தில் 247 வேட்பாளர்கள்
ADDED : ஏப் 09, 2024 06:34 AM
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளில், 226 ஆண்கள், 21 பெண்கள் என, 247 வேட்பாளர்கள் இறுதி களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் முதல்கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல், மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி நிறைவுபெற்றது. மொத்தம், 358 வேட்பாளர்கள், 492 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின்போது, 74 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 300 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே இம்மாதம் 6ம் தேதி ஒரு வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றிருந்தார். மனுக்கள் திரும்பப் பெறுவதற்கு, நேற்று கடைசி நாள் என்பதால், 52 வேட்பாளர்கள் மனுக்களை திரும்பப் பெற்றனர்.
அதிகபட்சமாக, பெங்., ரூரல் தொகுதியில், 12 பேரும்; குறைந்தபட்சமாக தட்சிண கன்னடா, கோலாரில் தலா ஒருவரும் திரும்பப் பெற்றனர். உடுப்பி - சிக்கமகளூரு, பெங்., வடக்கில் ஒருவர் கூட திரும்ப பெறவில்லை.
இதையடுத்து, முதல்கட்ட தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளின் இறுதி களத்தில் 247 வேட்பாளர்கள் இருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்றிரவு பட்டியல் வெளியிட்டது. இதில், 226 ஆண்கள், 21 பெண்கள் அடங்குவர்.
அதிகபட்சமாக, சிக்கபல்லாபூரில் 29 பேரும்; குறைந்தபட்சமாக தட்சிண கன்னடாவில் 9 பேரும் போட்டியிடுகின்றனர்.
ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் இடம்பெறலாம். அதற்கு மேல் இருந்தால், இரண்டாவது இயந்திரம் இணைக்கப்பட வேண்டும்.
இந்த வகையில், சித்ரதுர்கா, துமகூரு, மைசூரு, பெங்., வடக்கு, பெங்., சென்ட்ரல், பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய லோக்சபா தொகுதிகளில், தலா இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

