வங்கதேச மாணவர் தலைவர் மரணத்தால் மீண்டும் கலவரம்! ஹிந்து இளைஞர் கொடூரமாக எரித்து கொலை
வங்கதேச மாணவர் தலைவர் மரணத்தால் மீண்டும் கலவரம்! ஹிந்து இளைஞர் கொடூரமாக எரித்து கொலை
ADDED : டிச 20, 2025 01:30 AM

டாக்கா: வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சமீபத்தில் சுடப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்ததை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி, ஹிந்து இளைஞரை ஒரு கும்பல் கொடூரமான முறையில் அடித்து கொன்று, அவர் உடலை சாலையில் போட்டு தீவைத்து எரித்தது. பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைத்ததுடன், டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக கடந்தாண்டு ஜூலையில், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தின் மூலம் முக்கிய மாணவர் தலைவராக உருவெடுத்தவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, 34. ஜூலை போராட்டத்துக்கு பின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு தப்பி நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அரசின் இடைக்கால தலைமை ஆலோசகராக பதவியேற்றார்.
தேர்தலில் போட்டி
அதன் பின் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, 'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பின் செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை இளைஞர்களிடையே பரப்பினார். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தினார்.
அடுத்த ஆண்டு பிப்., 12ல் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில், ஷெரீப் ஓஸ்மான் டாக்காவில் ஒரு தொகுதியில் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி தலைநகர் டாக்காவில் உள்ள புரானா பால்டன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்தவர், சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. டாக்கா மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஷெரீப் ஓஸ்மான் உயிரிழந்தார்.
வங்கதேசத்தில் தடை செய்யப்பட்ட அவாமி லீக்கின் கட்சியின் மாணவர் அணி முன்னாள் உறுப்பினர் பைசல் கரீம் மசூத் என்பவர், ஓஸ்மானை சுட்டதாக போலீசார் கண்டறிந்தனர். பைசலின் சகோதரி வீட்டில் இருந்து அவர் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தற்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். அவருக்கு ஆலம்கீர் ஷேக் என்பவர் உதவியதாக கூறப்படுகிறது. 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீஸ் உதவியுடன் இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது. இருவர் குறித்தும் தகவல் அளிப்போருக்கு, 50 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஷெரீப் ஓஸ்மான் இறந்த செய்தி அறிந்து, வங்கதேசம் முழுதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் போராட்டம் கலவரமானது.
தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் திரண்டு ஷெரீப் ஓஸ்மான் கொலையில் நீதி வேண்டும் என முழங்கினர். கொலையாளிகள் இந்தியா தப்பிச்சென்றதாக கூறப்படுவதால், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். நாடு முழுதும் அவாமி லீக் அலுவலகங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகின.

நீடிக்கும் பதற்றம்
மேலும், டாக்காவின் கவ்ரான் பஜார் பகுதியில் உள்ள அந்நாட்டின் பிரபல பத்திரிகைகளான, 'பிரைம் ஆலோ' மற்றும் 'டெய்லி ஸ்டார்' அலுவலகங்களை அடித்து நொறுக்கி வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அலுவலகத்தில் சிக்கிய பத்திரிகையாளர்களை தீயணைப்பு துறை யினர் பத்திரமாக மீட்டனர்.
டாக்காவில் உள்ள இந்திய துாதரகத்தை வன்முறை யாளர்கள் மீண்டும் கல்வீசி தாக்கினர். அதேபோல் முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பல இடங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். பல பகுதிகள் இன்னும் பதற்றமாகவே உள்ளன.
மாணவர் - இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் மறைவு, மிகுந்த வேதனையளிப்பதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

