ADDED : ஆக 13, 2024 07:19 AM
தட்சிண கன்னடா: கன மழையால் பள்ளி, பி.யு., கல்லுாரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையால், 26 வாரங்களுக்கு சனிக்கிழமையன்று முழு நாள் பள்ளி, கல்லுாரிகள் இயங்க, கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழையால், மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகள் 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் 26 சனிக் கிழமையன்று முழு நேரம் பள்ளி, கல்லுாரிகள் நடத்த, கல்வி துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
பல ஆண்டுகளாக, தட்சிண கன்னடாவில் பருவமழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே விடுமுறைகள் வருவதால், மாணவர்கள் பாடம் கற்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. இருப்பினும் கூடுதல் வகுப்புகள் மூலம் இதை ஈடுசெய்ய, கடந்த காலங்களில் செயல்படவில்லை.
எனவே, பள்ளி, பி.யு., கல்லுாரிகளுக்கு, நடப்பு கல்வியாண்டில் அடுத்து வரும் 26 சனிக்கிழமைகளிலும் முழு நாள் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பி.யு., கல்லுாரிகளுக்கு சனிக்கிழமை முழு நாளும், தேவைப்பட்டால் ஞாயிற்று கிழமை அரை நாளும் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆயினும், சி.இ.டி., நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராக, பயிற்சி செய்ய உள்ள அறிவியல் மாணவர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், '10ம் வகுப்பு, பி.யு.சி., மாணவர்களுக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இது தொடர்பாக பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.