ADDED : செப் 12, 2024 09:52 PM
மயூர் விஹார்:கிழக்கு டில்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 8 இடங்களில் போலீசாருடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் சோதனை நடத்தி 26 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டது.
மயூர் விஹார் துணை கலெக்டர் சஞ்சய் குமார் தலைமையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 9 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 26 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து துணை கலெக்டர் கூறுகையில், “இங்கு குழந்தைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் கொடுத்தது. குழந்தைகள் அதிகபட்சமாக வேலை வாங்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சரியான தங்கும் இடம் கூட வழங்கப்படவில்லை. நாளை (இன்று) குழந்தைகள் நலக்குழு முன் அவர்கள் ஆஜர்படுத்தப்படுவர். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

