முதல்வர் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு; ஜனவரி 21ல் விசாரணை
முதல்வர் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு; ஜனவரி 21ல் விசாரணை
ADDED : டிச 12, 2025 05:45 AM

தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடாக வெற்றி பெற்றதாகச் சொல்லி, அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையில், 'ஸ்டாலின் வெற்றி செல்லும்' என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றச்சாட்டு
இந்த உத்தரவை எதிர்த்து துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த செப்., 25ல், இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்த போது, 'முதல்வர் ஸ்டாலின் முறைகேடு செய்து, கொளத்துார் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்றாரா? இந்த விவகாரத்தில், மனுதாரர் துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் என்னன்ன? அது தொடர்பாக, எந்தந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும், ஒரு சிறிய குறிப்பாக தயார் செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என சைதை துரைசாமிக்கு நீதிபதிகள் உத்தர விட்டிருந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
ஒத்திவைப்பு
அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வழக்கை வேறு ஒரு தினத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்,” என கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் வழக்கின் விசாரணை, வரும் ஜன., 21ல் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், முதல்வரின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- டில்லி சிறப்பு நிருபர் -

