27 கட்டடங்கள் இடிந்து விபத்து: நீரில் மூழ்கி தாய், மகன் பலி
27 கட்டடங்கள் இடிந்து விபத்து: நீரில் மூழ்கி தாய், மகன் பலி
ADDED : ஆக 02, 2024 01:39 AM

சப்ஜிமண்டி:கனமழையால் நகரின் பெரும் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து, 27 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
நேற்று முன் தினம் நள்ளிரவு 12:00 மணி வரை, நகர காவல்துறைக்கு கட்டடம் இடிந்து விழுந்ததாக 26 அழைப்புகள் வந்ததாகவும், வியாழக்கிழமை காலை 7:00 மணி வரை இதுபோன்று மேலும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணி
சுப்ஜி மண்டி பகுதியில் பழமையான புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் வீடு இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. மீட்புப்பணியில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்புப் படையினரும் இறங்கினர்.
இடிபாடுகளுக்குள் அனில் குமார் குப்தா, 62, உட்பட நான்கு பேர் சிக்கிக் கொண்டார். தீயணைப்புப் படையினர் அவர்களை மீட்டு, செயின்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அனில் குமார் உயிரிழந்தார். மற்ற மூவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு டில்லியின் காஜிபூர் பகுதியில் உள்ள வாரச்சந்தைக்குச் சென்ற தனுஜா, 22, அவரது மூன்று வயது மகன் பிரியான்ஷ் ஆகியோர் தண்ணீர் தேங்கிய வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.
சாலையோர வடிகால் கட்டப்பட்டு வரும் கோடா காலனி பகுதிக்கு அருகே இரவு 8:00 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீச்சல் வீரர்கள், கிரேன்கள் உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டனர். லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கார்கள் சேதம்
தெற்கு டில்லியின் டிபென்ஸ் காலனியில் அன்று இரவு 9:30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு பெண் காயமடைந்தார். ஒரு கார் சேதமடைந்தது.
வடகிழக்கு டில்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் வீட்டின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.
மத்திய டில்லியின் தர்யாகஞ்சில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து கார்கள் சேதமடைந்தன.
மற்றொரு சம்பவத்தில், தென்மேற்கு டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு கார்கள் சேதமடைந்தன.