27 ஆண்டுகளுக்கு முன் கொலை துறவியாக மாறிய குற்றவாளி கைது
27 ஆண்டுகளுக்கு முன் கொலை துறவியாக மாறிய குற்றவாளி கைது
ADDED : மே 02, 2024 12:55 AM
புதுடில்லி:புதுடில்லி ஓக்லாவில் வசித்தவர் தில்லு என்ற ராமதாஸ்,77. கடந்த 1997ம் ஆண்டு சொத்துத் தகராறில் தன் உதவியாளரை கொலை செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் தேடிய போது தலைமறைவானார்.
இந்நிலையில், ஓக்லா கொலைக்குற்றவாளி உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இருப்பதாக டில்லி போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படையினர் ரிஷிகேஷ் சென்று முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளியை அடையாளம் காண, அங்கு தன்னார்வலராக பணியாற்றினர்.
மூன்று நாட்களாக தன்னார்வலராக பணியாற்றிய போலீசார், கீதா பவன் அருகே, நேற்று முன் தினம் ராமதாஸை கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:
டில்லியில் கொலை செய்த பின், உத்தர பிரதேசத்தின் கான்பூருக்கு சென்றேன். அங்கு அடையாளத்தை மாற்றி போலி அடையாள அட்டை வாங்கினேன். ஆனால், என்னை அறிந்த பலர் அடிக்கடி கான்பூர் வந்து சென்றதால், அங்கிருந்து ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் என இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். மேலும் துறவியர் அணியும் உடைகளைப் பயன்படுத்தினேன். சில வருடங்களில் துறவியாகவே மாறினேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
கொலை நடந்து 27 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை, குற்றப் பிரிவு துணைக் கமிஷனர் அமித் கோயல் பாராட்டினார்.

