2034க்குள் 2வது விமான நிலையம்; துணை முதல்வர் திட்டவட்டம்
2034க்குள் 2வது விமான நிலையம்; துணை முதல்வர் திட்டவட்டம்
ADDED : ஆக 06, 2024 02:07 AM

பெங்களூரு : ''பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம், 2034க்குள் கட்டி முடிக்கப்படும். இதற்காக ஏழெட்டு இடங்கள் தேர்வு செய்து, முதல்வரிடம் ஆலோசிக்க உள்ளேன். மத்திய அதிகாரிகள் தேர்வு செய்யும் இடத்தில், விமான நிலையம் கட்டப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று துணை முதல்வர் சிவகுமார், கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் பெங்களூரில் இரண்டாவது பயணியர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். இது தொடர்பாக முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தை அரசியலாக்காமல், அனைவரின் நலனுக்காக உழைக்க வேண்டும்.
பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் மட்டுமே உள்ளன. வருங்காலத்தில் இது போதாது.
இரண்டாவது விமான நிலையத்துக்காக ஏழெட்டு இடங்கள் தேர்வு செய்துள்ளோம்.
விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அனைத்து தகவல்களும் சேகரித்து, முதலில் புதுடில்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் இங்கு வந்து, இடங்களை பார்வையிடுவர். எந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பர். அவர்கள் அனுமதி அளித்தவுடன், பணிகள் துவங்கும்.
தற்போதைய விமான நிலைய நிர்வாகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம், 2034ல் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தம் முடிவதற்குள், 4,000 ஏக்கரில், மத்திய, மாநில, பொது கூட்டணியில் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக தொழில்நுட்ப குழு எங்களிடம் சமர்ப்பித்த அறிக்கையை, முதல்வரிடம் காண்பித்து விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.