UPDATED : ஆக 30, 2024 12:00 AM
ADDED : ஆக 29, 2024 11:56 PM

திருவனந்தபுரம் : மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில், பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகரும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளதால், கைது நடவடிக்கையில் இருந்து ஐந்து நாட்களுக்கு முகேஷ் தப்பியுள்ளார்.மலையாள திரையுலகில், பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
சலசலப்பு
திரைப்பட வாய்ப்புகளுக்காக, பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பல ஆண்டுகளுக்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையர், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பொது வெளியில் வெளிப்படையாக பேச துவங்கினர். இது, கேரள சினிமாத்துறையில் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள மாநில அரசு அமைத்துள்ளது. அக்குழுவினரை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்களை நேரடியாக தெரிவித்து
வருகின்றனர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த நடிகை ஒருவர், மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித், 2009ல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
அதேபோல, பிரபல நடிகர் சித்திக், எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஹோட்டலில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றொரு நடிகை புகார் அளித்தார். இதைத்
தொடர்ந்து, இவர்கள் இருவர் மீதும் போலீசார் நேற்று முன்தினம்
வழக்குப் பதிவு செய்தனர்.
![]() |
ராஜினாமா
இதனால், மாநில அரசு நடத்தும் கேரள சலசித்ர அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், 'அம்மா' என்றழைக்கப்படும், மலையாள திரைக்கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.
நடிகர் மோகன்லால் தலைமையிலான கேரள சினிமா நடிகர் சங்க செயற்குழுவே கலைக்கப்பட்டு விட்டது.
இந்த புகார்களின் தொடர்ச்சியாக, பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ள நடிகை ஒருவர், தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில், '2013ல், திரைப்படம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, பிரபல நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேளா பாபு, வழக்கறிஞர் சந்திரசேகரன், தயாரிப்பு நிர்வாகிகள் நோபல் மற்றும் விச்சு ஆகியோரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
3 பிரிவுகளில் வழக்கு
அவர்கள் அளித்த துன்புறுத்தல்களை பொறுத்துக் கொண்டு, அந்த படத்தில் பணியாற்றியதாகவும், ஒரு கட்டத்தில் அவர்களது வன்கொடுமை பொறுக்க முடியாத அளவுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டு
உள்ளார். இதில், நடிகர் முகேஷ், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.,வாக தற்போது பதவி வகித்து வருகிறார்.
எர்ணாகுளத்தின் மாராடு போலீஸ் ஸ்டேஷனில், முகேஷுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
அதை பெற்றுக்கொண்ட போலீசார், பாலியல் வன்கொடுமை உட்பட ஜாமினில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளில் முகேஷ் மீது வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
இதனால், கலக்கம் அடைந்த முகேஷ், எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நேற்று முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
அதில், புகார் அளித்துள்ள பெண், தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், தனக்கு சாதகமாக பல காரணிகள் இருப்பதாகவும், அந்த பெண்ணின் ஒற்றை வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'முகேஷின் முன்ஜாமின் மனு செப்., 5ல் விசாரிக்கப்படும்' என, தெரிவித்த நீதிபதிகள் அதுவரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து எம்.எல்.ஏ., முகேஷ் தற்காலிகமாக தப்பியுள்ளார்.
இவரை தவிர, நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ள ராஜு உள்ளிட்டோர் மீதும், பாலியல் பலாத்கார வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ., முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது. ''குற்றம் சுமத்தப்பட்டுள்ள முகேஷ், தார்மீக பொறுப்பேற்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா தெரிவித்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.பாலகோபால், ஏ.கே.சசீந்திரன் அளித்த பதில்:
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை உயர் நீதிமன்றம் முன் உள்ளது. முறையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, எந்தவித முன்முடிவுக்கும் இப்போதே செல்லவேண்டிய அவசியம் இல்லை.
முகேஷ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புகார் அளித்த பெண்ணும் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பதவியை ராஜினாமா செய்வதா, வேண்டாமா என்பது முகேஷின் தனிப்பட்ட விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
''முகேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவியில் தொடர முடியாது,'' என, மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.எல்.ஏ., கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சூர் விருந்தினர் மாளிகையில் இருந்து வெளியே செல்ல முயன்ற தன்னை வழிமறித்ததாக, பத்திரிகையாளர்கள் மீது மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து, அவர்கள் மீது அத்துமீறுதல், அரசு பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.