3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
3 பேர் கொல்லப்பட்ட நிலையில் 2 இளம் சிறார் மாயம்... ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு
ADDED : மார் 10, 2025 12:45 PM

கதுவா; ஜம்மு காஷ்மீரில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரு இளம் சிறார் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த 5ம் தேதி யோகேஷ் சிங், 32, தர்ஷன் சிங்,40 மற்றும் வருண் சிங்,15 ஆகிய 3 பேர் லோஹை மல்ஹார் பகுதியில் நடக்கும் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த போது, மூவரும் காணாமல் போகினர். இதையடுத்து, 8ம் தேதி மூவரும் சடலமாக பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
3 பேரையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதாகக் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், அமைதியை சீர்குலைக்க சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்றும் உறுதியளித்தார்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இளம் சிறார்கள் இருவர் மாயமாகி இருப்பது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
3 கொலைகள் நடந்த இரு தினங்களுக்குப் பிறகு, முகமது தீன், ரெஹ்மன் அலி ஆகிய இரு இளம் சிறார்கள் காணாமல் போயுள்ளனர். கடைசியாக ராஜ்பக் பகுதியில் இருந்த அவர்கள், திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.