அக்காள் கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி: காதலித்து மறுமணம் செய்ததால் ஆத்திரம்
அக்காள் கணவரை ஆள் வைத்து கொன்ற தம்பி: காதலித்து மறுமணம் செய்ததால் ஆத்திரம்
UPDATED : ஆக 17, 2025 07:17 PM
ADDED : ஆக 17, 2025 11:08 AM

மேலுார் : கணவர் இறந்த பின், தன் சகோதரி காதலித்து மறுமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த தம்பி, தன் நண்பர்களை ஏவி கார் ஏற்றி, அக்கா கணவரை கொலை செய்த சம்பவம் மதுரை மேலுாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், மேலுார் தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி, 24; பொட்டப்பட்டியை சேர்ந்த உறவினர் செல்வத்தை திருமணம் செய்தார். இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் செல்வம் இறந்தார். கணவர் வீட்டில், குழந்தைகளுடன் வசித்து வந்த ராகவிக்கு, பக்கத்து வீட்டில் இருந்த உறவினர் சதீஷ்குமார், 21, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூலையில் ராகவி வீட்டில் இருந்து மாயமானார். அவரது பெற்றோர் மேலுார் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில், சதீஷ்குமாரை திருமணம் செய்து, திருச்சியில் வசிப்பது தெரிந்தது. ராகவியின் பெற்றோர், இருவரையும் சேர்ந்து வாழ வைப்பதாக போலீஸ் ஸ்டேஷனில் கூறி, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சதீஷ்குமாரை அவரது வீட்டிற்கு அனுப்பி விட்டு, ராகவியை வீட்டுச்சிறையில் வைத்தனர்.
சில தினங்களுக்கு முன் சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட ராகவி, தான் வீட்டுச்சிறையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மனைவியை மீட்டு தரும்படி, ஆக., 14ல் மேலுார் மகளிர் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். ஆக., 16ல் இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது, கணவருடன் திருச்சி செல்வதாக ராகவி கூறியதால், போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இருவரும் டூ - வீலரில் சென்றனர்.
இந்த தகவல், சிங்கப்பூரில் உள்ள ராகவியின் தம்பி ராகுலுக்கு தெரிய வந்தது. அவர், உடனடியாக தன்னுடன் சிங்கப்பூரில் பணியாற்றி, தற்போது சொந்த ஊர் திரும்பிய நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி மற்றும் சில உறவினர்களை தொடர்பு கொண்டு, இருவரையும் தீர்த்துக் கட்டும் படி கூறியுள்ளார். இதையடுத்து, மேலுார் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து டூ - வீலரில் ராகவி, கணவருடன் புறப்பட்டார்.
அவர்களை காரில் பின் தொடர்ந்த ராகுலின் நண்பர்கள், இரவு, 11:30 மணிக்கு அய்யாபட்டி விலக்கருகே டூ - வீலர் மீது காரால் மோதினர். இதில், சதீஷ்குமார், ராகவி தடுமாறி விழுந்தனர். காரில் வந்த நால்வரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த ராகவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசில் அவர் அளித்த புகாரில், கொலைக்கு காரணமான தம்பி ராகுல், உடந்தையாக இருந்த உறவினர், நண்பர்கள் அய்யனார், அருண்பாண்டி, சரிதா, அழகர், ஆறுமுகம் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார்.
கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 10க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் மேலுாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.