ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை துவங்கியது
ஸ்ரீசத்யசாய் நுாற்றாண்டு விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை துவங்கியது
UPDATED : நவ 08, 2025 06:59 PM
ADDED : நவ 08, 2025 06:39 PM

புட்டபர்த்தி : ஸ்ரீ சத்ய சாய் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உலகளாவிய அகண்ட பஜனை கோலாகலமாக துவங்கியது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இவருடைய பெயரில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் உலகெங்கிலும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும், நவம்பர் 23 அன்று இவரது அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்வு இன்று நவம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை தொடர்ந்து எங்கும் இல்லாத வகையில் அகண்ட பஜன் என்ற இடைவிடாத 24 மணி நேர பஜனையாக உலகெங்கிலும் நடைபெறுகிறது. பக்தர் குழுக்கள் மாறி மாறித் தொடர்ந்து இந்த பஜனையை நடத்துவது சிறப்பாகும். இந்த ஆண்டு அகண்ட பஜனை புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் இன்று துவங்கியது.
முன்னதாக காலை 8:00 முதல் 9:00 மணி வரை வேதமந்திரம், காலை 9:00 - 9:30 மணி வரை பஜனை மற்றும் மங்கள ஆரத்தி, சாய் காயத்ரி நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு வேதம் பாராயணம் நடைபெற்று, தொடர்ந்து உலகளாவிய அகண்ட பஜனை மாலை 6.00 மணிக்கு துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சாய் பக்தர்கள் கலந்து கடவுள் நாமங்களை பாடி வருகின்றனர். உலகளாவிய இந்த அகண்ட பஜனை 24மணி நேரம் தொடர்ந்து நடைபெறுவது குறிபிடத்தக்கது.

அகண்டநாம ஜபம் என்பது நேரம், காலம் பார்க்காமல் தொடர்ச்சியாக, பலர் கூடி கடவுள் நாமங்களை ஜபித்து பிரார்த்தனை செய்வதாகும். இதில் பங்கேற்றால் நல்வாழ்வு, ஆயுள், செல்வ வளம் உண்டாகும். வாழ்விற்கு பிறகு மோட்ச கதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

