'குடும்பம் வேறு, அரசியல் வேறு...': நில மோசடியில் பேரன் பெயர் குறித்து சரத் பவார் பதில்
'குடும்பம் வேறு, அரசியல் வேறு...': நில மோசடியில் பேரன் பெயர் குறித்து சரத் பவார் பதில்
ADDED : நவ 08, 2025 04:33 PM

மும்பை: குடும்பத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும் என நிலமோசடியில் பேரன் பெயர் குறித்து சரத் பவார் பதில் அளித்தார்.
மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
இந்தச் சூழலில், அரசு நிலம் துணை முதல்வரின் மகனுக்கு விற்கப்பட்டிருப்பதால், விரிவான விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் குறித்து, துறை ரீதியான விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், கூடுதல் தலைமை செயலர் விகாஷ் கார்கே தலைமையில் உயர்மட்ட விசாரணை கமிட்டியையும் அமைத்துள்ளார்.
எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் தவறுகளுக்கு நான் என்றும் துணை போனது கிடையாது என நில விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் விளக்கமளித்து விட்டு நழுவிவிட்டார். இந்த மோசடி புகார் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சரத் பவார் அளித்த பதில்: குடும்பத்தையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். குடும்பமும் அரசியலும் எனக்கு வேறு வேறு.
பார்த் பவாருக்கு எதிராக ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறித்து, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமே சொல்ல முடியும். இந்த விவகாரம் குறித்து சுப்ரியா சுலேவின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு சரத் பவார் கூறினார்.
நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். இவர் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில், அண்ணன் மகன் அஜித் பவாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்காத வெறுப்பில் இருந்த அஜித் பவார், கட்சியை உடைத்துக் கொண்டு, தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து கொண்டார். தற்போது அண்ணன் மகன் அஜித் பவார் மகன் நிலமோசடி வழக்கில் சிக்கியது குறித்து, சரத் பவார் மவுனம் கலைத்துள்ளார்.

