பிரதமர் மோடியால் பீஹாருக்கு வருகிறது பாதுகாப்பு வழித்தடம்: அமித் ஷா பிரசாரம்
பிரதமர் மோடியால் பீஹாருக்கு வருகிறது பாதுகாப்பு வழித்தடம்: அமித் ஷா பிரசாரம்
ADDED : நவ 08, 2025 04:05 PM

கதிஹார்: பீஹாரில் ஒரு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைத்துத் தர, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.
பீஹார் சட்டசபைக்கான 2ம் கட்ட ஓட்டுப்பதிவை முன்னிட்டு, 3 இடங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ.8) தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கதிஹார் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;
பீஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி இம்முறை 160 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தலைமையில், முன்னேறிய மாநிலங்களாக மாறும் சூழலை நோக்கி பீஹார் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் பீஹாரில் உள்ள ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவோம். அவர்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை மீட்போம். லாலு ஆட்சியில் சட்டத்துக்கு புறம்பாக செய்யப்பட்டு வரும் வணிகத்தை நிறுத்துவோம்.
சீமாஞ்சலில் நிலவி வரும் அனைத்து சட்டவிரோத செயல்களையும், அதற்கான ஆணி வேரையும் அழிப்போம். பீஹாரில் ஒரு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைத்துத் தர, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தோட்டாக்கள் மூலம் அவர்களுக்கு பதில் தரப்படும். அந்த தோட்டாக்கள் நம் மண்ணில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தான் மீது சுடப்படும்.
காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் அவர்களின் குடும்பங்களுக்காக மட்டுமே இயங்கி வருகிறது. தங்களின் குடும்பங்களுக்காக மட்டுமே அவர்கள் உழைத்து வருகின்றனர்.
லாலு மகன் தேஜஸ்வி முதல்வராகவோ, சோனியா மகன் ராகுல் பிரதமராகவோ முடியாது. ஏன் என்றால் இங்கே முதல்வராக நிதிஷ் உள்ளார். அங்கே பிரதமராக மோடி இருக்கிறார். வேறு யாருக்கும் இங்கே இடமில்லை.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

