ADDED : செப் 03, 2024 10:33 PM

பெங்களூரு : 'மழையால் பாதிப்படைந்துள்ள மாவட்டங்களுக்கு செல்லாமல் துாங்கிக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, சரணபசப்பா தர்சனாபுரா, ஈஸ்வர் கன்ட்ரே ஆகிய மூன்று பேரை கண்டுபிடித்து கொடுங்கள்' என, சமூக வலைதளங்களில் பா.ஜ.,வினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலங்களை ஒட்டி உள்ள கர்நாடகாவின் கலபுரகி, யாத்கிர், பீதர் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் மழையால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள், அம்மாவட்டங்களில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், கலபுரகி மாவட்ட பொறுப்பு அமைச்சர் பிரியங்க் கார்கே, யாத்கிர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சரணபசப்பா தர்சனாபுரா, பீதர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே ஆகிய மூன்று பேரை காணவில்லை என்று பேக்ஸ்புக், எக்ஸ் வலைதளத்தில் பா.ஜ.,வினர் பதிவு செய்துள்ளனர்.
'கடும் மழையால், மூன்று மாவட்டங்கள் மூழ்கிக் கொண்டிருந்தாலும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை காணவில்லை; அவர்களை, தயவு செய்து கண்டுபிடித்துக் கொடுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 'கலபுரகி மூழ்குகிறது; யாத்கிருக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது; பீதரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நடந்தும், துாங்கிக் கொண்டிருக்கும், இந்த மாவட்டங்களின் பொறுப்பற்ற அமைச்சர்களை கண்டுபிடித்துக் கொடுங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.