ADDED : ஆக 03, 2024 11:07 PM
பெங்களூரு: கர்நாடகாவில் 2023ல், சராசரியான அளவில் மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சியால் மக்கள் தவித்தனர். அணைகள் நிரம்பவில்லை. 200க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக, அரசு அறிவித்தது. பல கிராமங்கள் மட்டுமின்றி, நகரப்பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட, 25 சதவீதமும், வடகிழக்குப் பருவமழை 38 சதவீதமும் குறைவாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
நீரின்றி பயிர்கள் சேதமடைந்தன. விவசாயிகள் தற்கொலைகளும் அதிகரித்தன. கால்நடைகளும் கூட, தீவனம், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டன.
மழை பெய்யுமா, வறட்சி நீங்குமா என, பொதுமக்களும், அரசும் எதிர்பார்த்தன. அதன்படியே இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. மழைக்காலத்துக்கு முன்பே, மழை பெய்யத் துவங்கியது.
மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்ததால், அணைகள், ஏரிகள் நிரம்பின. 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, அதிக மழை பெய்துள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வறட்சி நீங்கியதால் மக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 1994ல், கர்நாடகாவில் வழக்கத்தை விட, 30 சதவீதம் கூடுதல் மழை பெய்திருந்தது. 30 ஆண்டுகளுக்குப் பின், இம்முறை சராசரியை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் 42 சதவீதம், வடக்கு மாவட்டங்களில் 31 சதவீதம், மலைப்பகுதியில் 28 சதவீதம், கடலோர மாவட்டங்களில் 24 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.
மாநிலத்திலேயே, மாண்டியாவில் மிக அதிகமாக 61 சதவீதம், பெலகாவியில் 60 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளது. 30 ஆண்டுகள் இல்லாத அளவில், நடப்பாண்டு அதிகமான மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.