ADDED : ஜூலை 15, 2025 10:23 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் மேலும், 34 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் அடுத்த வாரம் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, ஆரோக்ய மந்திர் எண்ணிக்கை, 67 ஆக உயருகிறது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது:
டில்லி மாநகரில் முழுமையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், குறைந்த கட்டணத்தில் ஆரம்ப சுகாதார சேவையை வழங்க ஏற்கனவே, 33 ஆரோக்ய மந்திர்களை முதல்வர் ரேகா குப்தா ஜூண் மாதம், 17ம் தேதி திறந்து வைத்தார். மேலும், 34 மந்திர்கள் அடுத்த வாரம் திறக்கப்படுகின்றன.
டில்லி மாநகரில் சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
இவை வெறும் கட்டடங்கள் அல்ல. முதன்மை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு மையங்கள். முந்தைய ஆம் ஆத்மி அரசு மருத்துவத் துறையில் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவில்லை. அரசு மருத்துவமனைகளையும் பராமரிக்கவில்லை.
மத்திய டில்லியில் ஐந்து, கிழக்கு டில்லியில் நான்கு மற்றும் வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு டில்லியில் ஆரோக்கிய மந்திர்கள் அடுத்த வார இறுதிக்குள் திறக்கப்படும்.
அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே உள்ள மொஹல்லா கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பாலிகிளினிக்குகளை மேம்படுத்தி ஆரோக்ய மந்திர்களாக மாற்றப்பட்டவை.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 1,100 ஆரோக்ய மந்திர் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.