ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் பலி
ADDED : அக் 18, 2025 07:40 AM

காபூல்: பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த மோதல்களில், இரு தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது இரு நாடுகளும் 48 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கன் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆப்கன் படையினர் தீவிர காட்டி வருகின்றனர். கொல்லப்பட்ட 10 பேரில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இவர்கள் கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் என்பது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.