கேரளாவில் 4 நாட்கள் பலத்த மழை; பல மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்'
கேரளாவில் 4 நாட்கள் பலத்த மழை; பல மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்'
ADDED : மே 16, 2024 06:11 AM

மூணாறு : கேரளாவில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட மிகவும் முன்கூட்டியே மே 19ல் துவங்குகிறது. மாநிலத்தில் மார்ச், ஏப்ரலில் கோடை மழை பொய்த்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
மாநிலத்தில் இன்று முதல் (மே 16) நான்கு நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை நேற்று வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
அதன்படி இன்று (மே 16ல்) இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், நாளை (மே 17ல் ) திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், மே 18ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், மே 19ல் திருவனந்தபுரம், இடுக்கி, கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் தென்மேற்கு பருவ மழை துவங்கும் மே 19ல் பல மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ' 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள போதும் அந்த மாவட்டங்களில் 'ஆரஞ்ச் அலர்ட்' க்கு நிகராக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை ஜூன் 8ல் துவங்கியது குறிப்பிடத்தக்கது.