தேயிலை பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை; 1500 அறுவடை இயந்திரம் வாங்குகிறது அரசு
தேயிலை பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை; 1500 அறுவடை இயந்திரம் வாங்குகிறது அரசு
ADDED : ஆக 02, 2025 06:10 AM

சென்னை: நீலகிரி மாவட்டத்தில், 'இண்ட்கோசர்வ்' எனப்படும், தமிழக சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், தொழிற்சாலைகள் கூட்டமைப்பு உள்ளது.
தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் தொழில் வணிக ஆணையரகத்தின் கீழ், இது செயல்படுகிறது. இது, நாட்டின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பாகும்.
கூட்டமைப்பில், 27,000 உறுப்பினர்களும், 16 தேயிலை தொழிற்சாலைகளும் உள்ளன. உறுப்பினர்கள் வழங்கும் தேயிலையை பயன்படுத்தி, 'ஊட்டி' உட்பட பல்வேறு வணிக பெயர்களில், தேயிலை துாள் உற்பத்தி செய்யப்பட்டு, ரேஷன் கடைகள் மற்றும் தனியார் கடைகளில் விற்கப்படுகிறது.
பெரும்பாலான உறுப்பினர்கள் கையால் தேயிலையை பறிக்கின்றனர். இதனால், ஒருவரால் தினமும் எட்டு மணி நேரத்துக்கு சராசரியாக, 100 கிலோவுக்கு குறைவாகவே தேயிலை பறிக்கப்படுகிறது. குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களால், தேயிலை பறிக்க தற்போது தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.
இதையடுத்து, இண்ட்கோசர்வ் தொழிற்சாலைகளின் தேவைக்கு, 3.25 கோடி ரூபாயில், பேட்டரியில் செயல்படும் 1,500 தேயிலை அறுவடை இயந்திரங்கள், 500 தோட்ட பராமரிப்பு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேயிலை பறிக்க ஒரு நாளைக்கு சராசரியாக, 300 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்ற தொழில்களில், இதை விட அதிக சம்பளம் வழங்கப்படுவதால், பலர் தேயிலை பறிக்க வருவதில்லை. வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தது மற்றும் குறைந்த சம்பளம் உள்ளிட்ட காரணங்களால், தேயிலை பறிக்க தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.
இதனால், 'இண்ட்கோசர்வ்'வின் கீழ் செயல்படும், 16 ஆலைகளில் உறுப்பினர்கள் பயன் பெற, 3.25 கோடி ரூபாயில் தேயிலை அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.
ஒரு இயந்திரம் வாயிலாக எட்டு மணி நேரத்தில், 200 முதல், 250 கிலோ தேயிலை பறிக்க முடியும்.
இயந்திரங்களை உறுப்பினர் களுக்கு இலவசமாக வழங்கலாமா அல்லது குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடலாமா என்பது குறித்து, அரசுடன் ஆலோசித்து இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.