சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ., உட்பட 4 பேர் ‛'டிஸ்மிஸ்'
சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ., உட்பட 4 பேர் ‛'டிஸ்மிஸ்'
ADDED : ஆக 02, 2025 05:59 AM
திருச்சி : முக்கொம்பு அணை பகுதியில், சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, ஜீயபுரம் எஸ்.ஐ.,யாக இருந்த சசிகுமார், நவல்பட்டு போலீஸ்காரர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீஸ்காரர் சங்கர் ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து விட்டோடி போலீஸ்காரர் சித்தார்த்தன் ஆகியோர் 2023 அக்., 4ல் காரில் சாதாரண உடையில் முக்கொம்பு அணை பகுதிக்கு சென்றனர்.
மது அருந்திய அவர்கள், இரண்டு காதல் ஜோடிகளிடம் தகராறு செய்துள்ளனர். அதில், அரியமங்கலம் பகுதி 17 வயது சிறுமி, துவாக்குடியை சேர்ந்த 19 வயது இளைஞரரை மிரட்டி, அடித்துள்ளனர். இளைஞரை அனுப்பி விட்டு, சிறுமியை மிரட்டி காரில் ஏற்றினர். மது போதையில் இருந்த அவர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.அந்த சிறுமி, காதலனுடன் சென்று முக்கொம்பு புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விஷயம், அப்போது எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் கவனத்திற்கு சென்றது. அவர் விசாரித்து மூன்று போலீசார் மற்றும் எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்தார்.
ஜீயபுரம் மகளிர் வழக்கு பதிந்து, சசிகுமார், சங்கர் ராஜபாண்டியன், பிரசாத், சித்தார்த்தன் ஆகியோரை கைது செய்தனர். தொடர் விசாரணையில், எஸ்.ஐ., மற்றும் மூன்று போலீசார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், ஒழுங்கு விதிகள் படி நான்கு பேரும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் பிறப்பித்துள்ளார்.