மோகன் பகவத்தை கைது செய்ய சொன்னார்கள்; முன்னாள் விசாரணை அதிகாரி வெளிப்படை
மோகன் பகவத்தை கைது செய்ய சொன்னார்கள்; முன்னாள் விசாரணை அதிகாரி வெளிப்படை
ADDED : ஆக 02, 2025 06:22 AM

மும்பை: “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி சொன்னார்கள்,” என, விசாரணை பிரிவில் இருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி மெஹ்பூப் முஜாவார் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மாலேகானில், 2008 செப்., 29ல் மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விசாரணை ஆரம்பத்தில் ஏ.டி.எஸ்., எனப்படும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். 2011ல், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு வழக்கு மாற்றப்பட்டது.
குண்டுவெடிப்பு தொடர்பாக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், 17 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையில், நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தவறியதை அடுத்து, ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, ஹிந்து அமைப்புகளை வேண்டுமென்றே இவ்வழக்கில் சிக்க வைத்ததாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது.
'காவி பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது; அதை உருவாக்கியதற்காக காங்., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அக்கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக, வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவில் இருந்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் முஜாவார் சோலாப்பூரில் நேற்று கூறியதாவது:
காவி பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை கைது செய்யும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
தவறான அபிப்பிராயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் வாயிலாக, பயங்கரவாத தடுப்பு படையின் போலி விசாரணை அம்பலமாகி உள்ளது. ராம் கல்சங்ரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் மற்றும் பகவத் உட்பட பல முக்கிய பிரமுகர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டேன்.
மோகன் பகவத்தை கைது செய்ய செல்லும்படி என்னிடம் கேட்டுக்கொண்டனர். அந்த உத்தரவை நான் பின்பற்றவில்லை.
போலி வழக்கு
எனவே, என் மீது போலி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் என் போலீஸ் வாழ்க்கை சீரழிந்தது. என், 40 ஆண்டுகால வாழ்க்கை தொலைந்தது.
நான் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. பயங்கரவாத தடுப்பு பிரிவு, எதைப்பற்றி எதற்காக அப்போது விசாரணை செய்தது என்று என்னால் சொல்ல முடியாது.
ஆனால், அவர்களின் உத்தரவு அமல்படுத்தும் வகையில் இல்லை. காவி பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை; அது போலியானது. இவ்வாறு அவர் கூறினார்.
சதி முறியடிக்கப்பட்டது!
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு வாயிலாக ஹிந்து பயங்கரவாத கதையை காங்கிரஸ் தலைமையிலான அரசு உருவாக்கியது. காவி பயங்கரவாதம், ஹிந்து பயங்கரவாதம் போன்ற சொற்கள் ஓட்டு வங்கிக்காக, 2008ல் பயன்படுத்தப்பட்டன. ஹிந்து மத முக்கிய தலைவர்கள், ஹிந்து அமைப்புகளை குறிவைத்து மாலேகான் வழக்கு விசாரணை இருந்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் வாயிலாக, ஹிந்து சமூகத்துக்கு எதிரான சதி முறியடிக்கப்பட்டது. -தேவேந்திர பட்னவிஸ் மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,

