ஆன்லைன் செயலியில் ரூ.400 கோடி மோசடி: சென்னை இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது
ஆன்லைன் செயலியில் ரூ.400 கோடி மோசடி: சென்னை இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது
ADDED : ஆக 17, 2024 12:04 AM

புதுடில்லி: சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் சூதாட்ட செயலியில், 400 கோடி ரூபாய் மோசடி நடந்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் உட்பட நான்கு பேரை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
பண பரிமாற்றம்
நம் அண்டை நாடான சீனாவில் இருந்து, 'பீவின்' என்ற பெயரில், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலி இயங்கி வந்தது.
இந்த செயலியில், 400 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக, மேற்கு வங்க போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையும் தனியாக விசாரித்து வருகிறது.
இந்நிலையில், 'பீவின்' செயலி தொடர்பான பணமோசடி வழக்கில், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஜோசப் ஸ்டாலின், ஒடிசாவைச் சேர்ந்த அருண் சாஹு, அலோக் சாஹு மற்றும் பீஹாரைச் சேர்ந்த இன்ஜினியர் சேத்தன் பிரகாஷ் ஆகியோரை, அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து, அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நான்கு பேரும், சீனாவைச் சேர்ந்த நபர்களுடன், 'டெலிகிராம்' சமூக வலைதளம் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளனர். பீவின் செயலியில் நடந்த மோசடியில், இந்த நான்கு பேரும் மூளையாக செயல்பட்டுள்ளனர்.
முறைகேடு
இந்த செயலி வாயிலாக திரட்டப்பட்ட நிதியை, அருண் சாஹு, அலோக் சாஹு ஆகியோர், தங்களது வங்கிக் கணக்கில் பெற்று, கிரிப்டோகரன்சியாக மாற்றி உள்ளனர்.
மேலும், சீன நபர்களின் வங்கிக் கணக்கில், இந்த கிரிப்டோகரன்சியை அவர்கள் டிபாசிட் செய்துள்ளனர்.
இந்திய ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்றுவதற்கு அருண் சாஹு, அலோக் சாஹு ஆகியோருக்கு சேத்தன் பிரகாஷ் உதவி உள்ளார்.
சாப்ட்வேர் இன்ஜினியரான ஜோசப் ஸ்டாலின், சீனாவின் கன்சு மாகாணத்தைச் சேர்ந்த பை பெங்யுன் என்பவரை, தனக்கு சொந்தமான, 'ஸ்டூடியோ 21 பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் இணை இயக்குனராக நியமித்தார்.
இவர்கள் இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை முறைகேடாக பயன்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

