ADDED : செப் 09, 2024 05:21 AM
பெங்களூரு : பெங்களூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநகராட்சி 40 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளது. ஆனாலும் சமீபகாலமாக தெருநாய்க்கடிக்கு ஆளாகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
பெங்களூரு நகரம் இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வந்தாலும், நகரின் உள்கட்டமைப்பு மோசமான நிலைக்கு சென்று உள்ளது. அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சாலை பள்ளங்களால் விபத்துகளும் நடக்கின்றன. இதுபோல குப்பையை நிர்வகிக்கும் பிரச்னையும், பெரும் சவாலாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சமீபகாலமாக பெங்களூரு நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது.
சாலையில் கூட்டமாக சுற்றி திரியும் தெருநாய்கள், சாலையில் நடந்து செல்வோரை விரட்டி, விரட்டி சென்று கடிக்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்வதால், விபத்துகளும் நடக்கின்றன. கடந்த மாதம் 28ம் தேதி ஜாலஹள்ளி பகுதியில், தெருநாய்கள் கடித்ததில் 76 வயது மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பல இடங்களில் தெருநாய் கடித்து, குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
ஆனால் தெருநாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் கோடிக்கணக்கில் செலவு செய்து உள்ளது.
தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்கிறோம். தடுப்பு ஊசி போடுகிறோம் என மாநகராட்சி ஊழியர்கள் செல்கின்றனர். ஆனால் தெருநாய்களால் ஏற்படும் தாக்குதல் மட்டும் குறைந்தபாடில்லை.
கடந்த 2019 - 2020ம் ஆண்டில் 4 கோடியே 71 லட்சத்து 9 ஆயிரத்து 664 ரூபாய்; 2020 - 2021ல் 6 கோடியே 42 லட்சத்து 42 ஆயிரத்து 550 ரூபாய்; 2021 - 2022 ல் 8 கோடியே 64 லட்சத்து 94 ஆயிரத்து 860 ரூபாய்; 2022 - 2023 ல் 9 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரத்து 985 ரூபாய்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2 கோடியே 64 லட்சத்து 46 ஆயிரத்து 935 ரூபாய் என மொத்தம் 39 கோடியே 82 லட்சத்து 44 ஆயிரத்து 774 ரூபாயை, தெருநாய்களை கட்டுப்படுத்த செலவு செய்து உள்ளதாக, மாநகராட்சி கணக்கு காண்பித்து உள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில், கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளை அடித்ததாக, மாநகராட்சி அதிகாரிகள் மீது, மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.