பெங்களூரில் 44.80 கி.மீ.,க்கு புதிய மெட்ரோ ரயில் பாதை
பெங்களூரில் 44.80 கி.மீ.,க்கு புதிய மெட்ரோ ரயில் பாதை
ADDED : ஆக 01, 2024 11:09 PM
பெங்களூரு: பெங்களூரில் 44.80 கி.மீ., துாரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்க, மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது செல்லகட்டா -- ஒயிட்பீல்டு; நாகசந்திரா -- சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் ரயில் பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், கெம்பாபுரா -- ஜெ.பி., நகர் 4வது பேஸ் இடையில் 32.20 கி.மீ., ஹொசஹள்ளி -- கடபகெரே இடையில் 12.60 கி.மீ., துாரத்திற்கு 15,611 கோடி ரூபாய் செலவில், புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க, கடந்த 2022ல் கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
கடந்த மாதம் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு, மத்திய பொது முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது. அதன்பின் திட்ட அறிக்கை மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த திட்ட அறிக்கைக்கு மத்திய நிதி அமைச்சகமும் தற்போது அனுமதி அளித்துள்ளது. திட்ட அறிக்கை, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.