வாக்காளர் பட்டியலில் மோசடி: பழைய பல்லவியை மீண்டும் பாடுகிறார் ராகுல்!
வாக்காளர் பட்டியலில் மோசடி: பழைய பல்லவியை மீண்டும் பாடுகிறார் ராகுல்!
ADDED : ஆக 07, 2025 03:05 PM

புதுடில்லி: கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது என்று காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் கமிஷனின், பீஹார் தேர்தல் சிறப்பு திருத்த நடவடிக்கை குறித்து ராகுல் அளித்த பேட்டி: தேர்தல்கள் ஜோடிக்கப்படுகின்றன. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வேறு மாதிரியாக இருந்தாலும், முடிவு பாஜவுக்கு சாதகமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் 5 ஆண்டுகளில் இல்லாதவாறு 5 மாதங்களில் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
பகிர மறுப்பு
வாக்காளர் பட்டியலை பகிர தேர்தல் கமிஷன் மறுக்கிறது. மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலைத் தர தேர்தல் கமிஷன் மறுக்கிறது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 5.30 மணிக்குப்பிறகு ஓட்டுப்பதிவு அதிகரித்தது. எப்படி மோசடி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தோம்.
கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது. பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது.
12 ஆயிரம் போலி ஓட்டுகள்
தேர்தல் கமிஷனுடன் இணைந்து பாஜ ஓட்டுகளை திருடுகிறது. கர்நாடகாவின் மஹாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிமான ஓட்டுகள் திருடப்பட்டன. ஒரே நபருக்கு பல மாநிலங்களில் ஓட்டு உள்ளது. மஹாதேவபுரா தொகுதியில் கிட்டத்தட்ட, 12,000 போலி ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் 40ஆயிரத்திற்கும் அதிகமான போலி முகவரிகள் உள்ளன. ஒரே வாக்காளர் பெயர் 4 வாக்குச்சாவடிகளில் இருந்தது கண்டறியப்பட்டது.
மோசடி
சில வாக்காளர்களின் பெயர்கள் வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளன பல்வேறு மாநிலங்களின் இல்லாத விலாசத்தை பதிவு செய்து, பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்த்து மோசடி நடந்துள்ளது. பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை, அடையாளம் காணும்படி இல்லை. ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் மட்டும் 48 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.