ADDED : மார் 06, 2025 12:46 AM

தட்சிண கன்னடா:மங்களூரு மாவட்ட சிறையில் மதிய உணவு சாப்பிட்ட, 45 விசாரணை கைதிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு மாவட்ட சிறையில், விசாரணை கைதிகள் உட்பட 350 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு நேற்று மதியம் 'அவலக்கி - அன்ன சாம்பார்' வழங்கப்பட்டது.
மாலை 4:30 மணி அளவில் கைதிகளில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தொடர்ந்து வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த சிறைச்சாலை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட 45 விசாரணை கைதிகளை, மாவட்டத்தின் வென்லாக் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் ஜீப்களில் அனுப்பி வைத்தனர். ஒருவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள், சிறைச்சாலைக்கு சென்று, உணவு மாதிரிகளை ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறியதாவது:
மாலை 4:30 மணியளவில் சில கைதிகள் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி எடுத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட 45 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவரின் நிலை மோசமாக உள்ளது. அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.