டிரம்ப்பை சந்திக்கிறாரா புடின்: அடுத்த வாரம் வாய்ப்பு என ரஷ்யா தகவல்
டிரம்ப்பை சந்திக்கிறாரா புடின்: அடுத்த வாரம் வாய்ப்பு என ரஷ்யா தகவல்
ADDED : ஆக 07, 2025 08:11 PM

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அடுத்த வாரம் அதிபர் புடின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனையடுத்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பை டிரம்ப் அறிவித்து வருகிறார். இச்சூழ்நிலையில், நேற்று புடினை, டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் வசிக்கும் கிரெம்ளின் அதிபர் மாளிகை அதிகாரி யூரி உஷாகோவ் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, ரஷ்ய அதிபர் புடின் அடுத்த வாரம் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்க தரப்பின் ஆலோசனையை ஏற்று, வரும் நாட்களில் இருதரப்பு மாநாடு நடத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். சந்திப்பு அடுத்த வாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. சந்திப்புக்கான இடம், குறித்து கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால், எந்த இடத்தில் சந்திப்பு நிகழும் என்பதை கூறவில்லை. இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்சில் சந்திப்பு நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.