பனிச்சரிவில் சிக்கிய 46 பேர் மீட்பு; நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு
பனிச்சரிவில் சிக்கிய 46 பேர் மீட்பு; நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு
ADDED : மார் 02, 2025 03:31 AM

டேராடூன் : உத்தரகண்டில், பத்ரி நாத் பகுதியில் உள்ள உயரமான எல்லை கிராமமான மானா அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 46 பேர் மீட்கப்பட்டனர். மாயமான ஐந்து பேரை மீட்கும் பணி தொடர்கிறது.
உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து, 3 கி.மீ., தொலைவில் மானா என்ற கிராமம் உள்ளது.
இது, இந்தோ - திபெத் எல்லையில், கடல் மட்டத்திலிருந்து, 10,499 அடி உயரத்தில் உள்ளது. இது, இந்திய எல்லையில் உள்ள கடைசி கிராமம்.
திபெத் எல்லையை நோக்கி நம் ராணுவத்தினர் செல்லும் பாதையில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில், நேற்று முன்தினம் காலை, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பின் 55 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த பகுதியில் திடீரென பலத்த மழை பெய்ததுடன், பனிச்சரிவும் ஏற்பட்டது. இதில், தொழிலாளர்கள் சிக்கினர். மானா - பத்ரி நாத் இடையே உள்ள பி.ஆர்.ஓ., முகாமும் பனிச்சரிவில் சிக்கியது.
தகவலறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம், 33 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது.
இந்த பணியில், நம் விமானப்படை மற்றும் ராணுவ விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று, 13 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மேலும், நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுவரை மொத்தம் 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான ஐந்து பேரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.