48 மணி நேரம் கனமழை எச்சரிக்கை மலை, கடலோர மாவட்டங்களில் உஷார்
48 மணி நேரம் கனமழை எச்சரிக்கை மலை, கடலோர மாவட்டங்களில் உஷார்
ADDED : ஆக 30, 2024 06:23 AM

பெங்களூரு: வங்க கடல், அரபி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், கர்நாடகாவின் மலைப்பகுதி, கடலோர பகுதி மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள், 'ஹை அலெர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழை இன்னும் முடியவில்லை. இந்நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், பெங்களூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில், திடீரென கன மழை பெய்தது.
இதனால் மெஜஸ்டிக், கோரமங்களா, மடிவாளா, பன்னரகட்டா, கே.ஆர்., சதுக்கம், விதான் சவுதா, பாகல்குன்டே, சிக்கபானவாரா, மைசூரு சாலை, தாசரஹள்ளி, ஜாலஹள்ளி, யஷ்வந்த்பூர், பீன்யா, மல்லேஸ்வரம், ஜே.சி., நகர், சிவாஜி நகர், மெஜஸ்டிக், எம்.ஜி., சாலை, டவுன் ஹால், பெல்லந்துார், சர்ஜாபூர்.
கே.ஆர்.,புரம், வித்யாரண்யபுரா, பொம்மனஹள்ளி, பி.டி.எம்., லே - அவுட், எலக்ட்ரானிக் சிட்டி, எச்.எஸ்ஆர்., லே - அவுட், கோரமங்களா, பனசங்கரி, பசவனகுடி, ஜே.பி.நகர், ஜெயநகர், குமாரசாமி லே - அவுட், பத்மநாபநகர்.
உத்தரஹள்ளி, அஞ்சனபுரா, பசவேஸ்வர நகர், காமாட்சிபாளையா, கெங்கேரி, நாயண்டஹள்ளி, ராஜாஜி நகர், ராஜராஜேஸ்வரி நகர், விஜயநகரா, மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.
இதனால் இப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகளில் பலர், மழையின் நனைந்தபடி வாகனத்தில் அமர்ந்திருந்தனர். சிலர் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நின்று கொண்டனர்.
மழையால் சாலைகள் ஏரிகள் போன்று காணப்பட்டது. நெலமங்களாவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
வில்சன் கார்டனின் சித்தையா சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்க கடல், அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகியுள்ளன. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கையும்; உடுப்பிக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுவிக்கப்பட்டு உள்ளது.
மலை பகுதிகளான ஹாசன், சிக்கமகளூரு, ஷிவமொகா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வட மாவட்டத்தின் உட்பகுதியான பெலகாவி, கலபுரகி, ராய்ச்சூர், யாத்கிர், தெற்கு உட்பகுதியான குடகு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்கு உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் கனமழையுடன் காற்று வீசும்.
பெங்களூரு சிட்டி, பெங்களூரு ரூரல், கோலார், சிக்கபல்லாபூர், ராம்நகர், மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் பல இடங்களில் லேசான மழை பெய்யும். வடக்கு உள், தெற்கு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 27 டிகிரியும், குறைந்தபட்சம் 20 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும்.
இவ்வாறு அதில்குறிப்பிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதையில் விழுந்திருந்த மரக்கிளை.

