32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்
ADDED : பிப் 24, 2025 07:39 AM

ஜலவார்: ராஜஸ்தானில் 32 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
ஜலவார் மாவட்டத்தில் விவசாய நிலத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பிரஹலாத் எனும் 5 வயது சிறுவன், நேற்று மதியம் சுமார் 1.15 மணியளவில், அங்கு தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதையறிந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, 32 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் மயக்க நிலையில் இருப்பதாகவும், தேவையான ஆக்சிஜன் பைப் வழியாக வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் சிறுவனை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், 'கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் இந்த ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. தண்ணீர் ஏதும் வராததால், அதனை மூட திட்டமிட்டிருந்தோம். அதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டது,' எனக் கூறினார்.

