ADDED : ஏப் 30, 2024 10:24 PM
கோலார்: தாகத்தை தணிக்க வயலில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்த 50 ஆடுகள் பலியாகின.
கோலார் உரிகிளி நாகநாளா என்ற கிராமத்தில் வெங்கடம்மா, மஞ்சுளா, நரசிம்மையா, ஆரத்தி, வசந்த ராஜு ஆகியோர் ஒன்றாக இணைந்து வயல் பகுதியில் ஆடுகளை மேய்ப்பது வழக்கம். நேற்றும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வயலில் தேங்கி இருந்த தண்ணீரை ஆடுகள் குடித்தன.
சில நிமிடங்களில், தண்ணீர் குடித்த ஆடுகள் சுருண்டு விழுந்தன. இது பற்றி தகவல் அறிந்த ஆடுகளின் உரிமையாளர்கள், கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், மயக்கத்தில் இருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இருந்தும் 50 ஆடுகளின் வயிறு வீக்கம் அடைந்து உயிரிழந்தன. 13 ஆடுகள் மட்டுமே உயிர் பிழைத்தன.
கால்நடைத் துறை கோலார் மாவட்ட இணை இயக்குனர் கங்கா துளசி, அதிகாரிகள் ராமையா, வெங்கடேஷ் மற்றும் ஊழியர்கள் ஆடுகளின் ரத்தங்களை எடுத்து பரிசோதனைக்குப் அனுப்பி வைத்தனர்.
அரசின் நிவாரணம் பெற்று தருவதாக உறுதி அளித்தனர்.
ஆடுகள் குடித்த தண்ணீரில் ரசாயனம் கலந்திருப்பதாக கூறப்படுகிறது.